×

பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் மீன்பிடி திருவிழா கோலாகலம்: கொப்பனங் கண்மாயில் ஏராளமானோர் குவிந்தனர்

பொன்னமராவதி, மே 4: பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது. பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி கிராமத்தில் உள்ள கொப்பனங்கம்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி, மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடிய மீன்பிடித் திருவிழா நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி கிராமத்தில் உள்ள கொப்பனங்கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வௌ்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்த நிலையில் ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால், பாப்புலட் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்.

The post பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் மீன்பிடி திருவிழா கோலாகலம்: கொப்பனங் கண்மாயில் ஏராளமானோர் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : festival ,Koppanapatti ,Ponnamaravathi ,Koppanang Kanmai ,Ponnamaravati ,Koppanapatti village ,Ponnamaravathi fishing festival ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...