×

(வேலூர்) 15 மாமரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்

பேரணாம்பட்டு, மே 4: பேரணாம்பட்டில் நேற்று அதிகாலை 15 மாமரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் காட்டு யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களையும் மரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்- கோமதி தம்பதி. இவர்களுக்கு சொந்தமான விவசாய விளை நிலத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் காட்டுயானைகள் புகுந்து 15 மாமரங்களை சேதப்படுத்தியது. மேலும், அங்கிருந்த 8 கல் கம்பங்களையும் பிடுங்கி எறிந்து விட்டு சென்றுள்ளது.

இதுகுறித்து கார்த்திகேயன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். இதேபோல், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சாரங்கள் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது விவசாய நிலத்திலும் 2 காட்டுயானைகள் புகுந்து அங்கிருந்த மாமரங்களை முறித்து சேதப்படுத்தியது. மோகன்பாபு என்பவரின் விவசாய நிலத்திலும் அன்னாசி பழ தோட்டத்தையும், மாமரங்களையும் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தொடர்ந்து காட்டுயானைகள் எங்களது விவசாய விளை நிலத்தை சேதப்படுத்தி வருகிறது. இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடைபெற்று கொண்டே தான் இருக்கின்றது. எனவே, இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post (வேலூர்) 15 மாமரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Peranampatu ,Vellore district ,Dinakaran ,
× RELATED இழப்பீடு கேட்டு சடலத்துடன்...