×

கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழாவையொட்டி திருநங்கைகள் அழகிப்போட்டிஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவண்ணாமலை, மே 4:திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில், கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. அதையொட்டி, திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது.
திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில், ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். மகாபாரத பாத்திரமான அரவான் களபலியை நினைவுகூறும் வகையில், இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் நடைபெறும் விழாபோல, திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் நடைபெறும் விழாவும் மிகவும் சிறப்புக்குரியதாகும்.
அதன்படி, வேடந்தவாடி கிராமத்தில் கடந்த மாதம் 14ம் தேதி கூத்தாண்டவர் கோயில் திருவிழா மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தினமும் பகலில் சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து நடந்தது. தொடர்ந்து, திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி ‘மிஸ் வேடந்தவாடி’ நேற்று முன்தினம் நடந்தது. அதில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர்.

அதில், சென்னையை சேர்ந்த பிரிஸ்திகா முதலிடத்தையும், மேல்மலையனூரைச் சேர்ந்த ரோஜா 2ம் பரிசையும், சென்னையை சேர்ந்த அமிஸ்திகா 3ம் பரிசையும் வென்றனர். மேலும், கூத்தாண்டவரை வழிபட்டு திருநங்கைகள் தாலி அணியும் மங்கள நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில், கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா நேற்று காலை விமரிசையாக நடந்தது. விநாயகர், கூத்தாண்டவர், காமாட்சியம்மன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி தேரவில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

உற்சவ மூர்த்திகள் வலம் வந்த 3 தேர்களும், அடுத்தடுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலையில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, அரவான் களபலியான நிகழ்ச்சியை தொடர்ந்து, நேற்று இரவு திருநங்கைகளின் தாலிகள் அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அடுத்த படம்: கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.

The post கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழாவையொட்டி திருநங்கைகள் அழகிப்போட்டிஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Koothandavar Temple Chariot Festival ,Tiruvannamalai ,Vedantavadi village ,
× RELATED மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார்...