×

‘மக்களைத்தேடி மேயர் திட்டம்’ ெதாடக்கம் பொதுமக்களின் மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்படும்: மேயர் பிரியா பேட்டி

தண்டையார்பேட்டை, மே 4: மக்களின் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ராயபுரத்தில் நடந்த மக்களைத்தேடி மேயர் திட்டம் தொடக்க விழாவில் மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் மக்களைத் தேடி மேயர் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் சென்னை மேயர் பிரியா 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு வட்டார அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்களை நேரடியாக பெற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

முதன்முறையாக சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் போட்டிப்போட்டு அளித்த மனுக்களைப் பெற்று, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்களின் குறைகளை தீர்க்க அமைச்சர் உத்தரவிட்டார். அப்போது, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம் மண்டலம் 5ல் தொடங்கப்பட்டுள்ளது. தொகுதி சார்ந்த எந்த பிரச்னையாக இருந்தாலும் மக்கள் மனு கொடுக்கலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம் அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படும்’’ என்றார்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘‘கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஊழல் நடந்துள்ளது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் திமுக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சிதான் ஆக வேண்டும். முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படுபவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் கட்டிடத்தை இடிக்க ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பேரிகாடு போடப்பட்டு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த கட்டிடம் இரவோடு இரவாக முழுவதுமாக அகற்றப்பட்டது. இப்படி மக்கள் பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.

நிகழ்ச்சியில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், இணை ஆணையர் சமீரன், துணை ஆணையர்கள் விஷூ மஹாஜன்,
ஷரண்யா அறி, சிவகுரு பிரபாகரன், நிலைக்குழுத் தலைவர் (நகரமைப்பு) இளையஅருணா, மண்டலக் குழு தலைவர் பி.ஸ்ரீராமுலு, மண்டல அலுவலர் (பொறுப்ப) தமிழ்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ‘மக்களைத்தேடி மேயர் திட்டம்’ ெதாடக்கம் பொதுமக்களின் மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்படும்: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Mayor Priya Mati ,Pundadarbate ,Mayor ,Raipura ,Priya ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!