×

காசிமேட்டில் 50 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

திருவொற்றியூர், மே 4: சென்னை பெருநகரில் போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் நேற்று முன்தினம் மீன்பிடிதுறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.என். செட்டி தெரு மற்றும் ஜீரோ கேட் சந்திப்பு அருகே தீவிரமாக கண்காணித்தனர். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அர்லே மணிகண்டா (22), போத்ராஜ் ஷேசு (32) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 50 கிலோ கஞ்சா மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். போத்ராஜ் ஷேசு மீது ஏற்கனவே ஆந்திர மாநில காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் உள்ளன.

The post காசிமேட்டில் 50 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kasimat ,Thiruvotiyur ,Chennai ,
× RELATED ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன்...