×

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எழில்மிகு கிராமங்களை நோக்கிய பயணம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், மே 4: நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடர்பாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எழில்மிகு கிராமங்களை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறம் என்பது மனித இனத்தின் உடல்நலம், உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கு உத்தரவாதம் அளிப்பதோடு வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் கூறுகளாகும். கிராம அளவில் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை வலியுறுத்தி எழில்மிகு கிராமங்களை நோக்கிய பயணம் கடந்த 1ம் தேதி துவங்கப்பட்டு வருகிற 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. “நம்ம ஊரு சூப்பரு” தொடர்பாக, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எழில்மிகு கிராமங்களை நோக்கிய பயண இயக்கத்தின் நடவடிக்கை யானது, ஒரு முறை பயன்படும் நெகிழி இல்லா கிராமங்களாக மாற்றுதல், பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது தண்டத் தொகை விதித்தல் மற்றும் வசூலித்தல் குறித்த முடிவுகள், வீடுகளில் கழிவுகளை பிரித்தல் என, இயக்கத்தின் மூலம் நிலையான நீடித்த சுகாதார நிலை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

இயக்க காலத்தில் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பள்ளி கல்வித்துறை, உயர் கல்வி துறை, வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலம், சமூகநலம், வனத்துறை, உணவுப் பாதுகாப்பு துறை, கூட்டுறவுத்துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், ஊரக குடிநீர் திட்டம், பொதுப்பணித் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என அனைத்து அரசுத்துறைகளும் பங்குபெற்று அவற்றின் அலுவலகங்கள் மற்றும் இதர நிறுவனங்களிலும் பெருந்திரள் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், தொடர்புடைய துறைகள் மூலம் மரக்கன்றுகள் நடுதல், கழிவுகளை பிரித்து மேலாண்மை செய்தல், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு போன்ற பணிகளும் நடைபெறவுள்ளது.இவ்வியக்கத்தின் நோக்கமே நீடித்த நிலையான தூய்மை கிராமங்களாக நமது ஊரக பகுதிகளை மாற்றி அமைத்து என்றுமே \”நம்ம ஊரு சூப்பரு\” என தெரிவிக்கும் வகையில், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட வேண்டும் என திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எழில்மிகு கிராமங்களை நோக்கிய பயணம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Namma Uru Suparu ,Dinakaran ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...