×

பிள்ளைபாக்கம் ஊராட்சியில் பராமரிப்பின்றி பாசிபடர்ந்து காணப்படும் நீர்நிலைகள்; கழிவுநீர் தேக்கமாக மாறிய அவலம்:சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரும்புதூர், மே 4: பிள்ளைபாக்கம் ஊராட்சியில் பராமரிப்பின்றி பாசி படர்ந்து காணப்படும் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம், பிள்ளைபாக்கம் ஊராட்சியில் போடி குட்டை, கன்னி குட்டை, ஒட்டன் குட்டை, ஒப்பிரான் குட்டை, ஆழ்கழனி, ராஜாங்ககழனி குளம், வேப்பங்கழனி குளம், மூங்கில் குட்டை, சுண்ணாம்பு குளம், வேம்புலி அன்னம் கோயில் குளம் உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகள் பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. மேலும், அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் குடிநீர் தேவையை ஒருசில குளம், குட்டைகள் பூர்த்தி செய்தது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நீர்நிலைகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.

இதனால் இந்த குளம், குட்டைகள் மாசடைந்து காணப்படுகிறது. தற்போது, போடி குட்டையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பு வீடுகள் கட்டபட்டுள்ளன. குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் நேரடியாக கலக்கப்படுவதால், இக்குளம் கடந்த 10 ஆண்டுகளாக கழிவுநீர் தேக்கி வைக்கும் குட்டையாக மாறியுள்ளது.
மேலும், இக்குளத்தில் குடியிருப்பு வீடுகளில் இருந்து குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால், இந்த குளம் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இதேபோல், மேற்கண்ட குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, ஆக்கிரமிப்பு அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; பிள்ளைபாக்கம் ஊராட்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகள் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால், மாசடைந்து காணப்படுகிறது. இந்த ஊராட்சியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதனால் இந்த ஊராட்சிக்கு போதிய வருவாய் கிடைக்கிறது. ஆனாலும் இந்த நீர்நிலைகளை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்வரவில்லை.இதுகுறித்து பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது போடி குளம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பிள்ளைபாக்கம் ஊராட்சியில் உள்ள குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைத்து, ஆக்கிரமிப்பு அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பிள்ளைபாக்கம் ஊராட்சியில் பராமரிப்பின்றி பாசிபடர்ந்து காணப்படும் நீர்நிலைகள்; கழிவுநீர் தேக்கமாக மாறிய அவலம்:சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pillipakkam Panchayat ,Alaam ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...