×

பஞ்சாப் 214 ரன் குவிப்பு

மொகாலி: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லிவிங்ஸ்டன் – ஜிதேஷ் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.பிசிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன், கேப்டன் தவான் களமிறங்கினர். பிரப்சிம்ரன் 9 ரன் எடுத்து அர்ஷத் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் பிடிபட்டார்.

அடுத்து தவானுடன் மேத்யூ ஷார்ட் இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. தவான் 30 ரன் (20 பந்து, 5 பவுண்டரி), ஷார்ட் 27 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பியுஷ் சாவ்லா சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பஞ்சாப் அணி 11.2 ஓவரில் 95 ரன்னுக்கு 3வது விக்கெட்டை இழந்து சற்றே பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில், லிவிங்ஸ்டன் – ஜிதேஷ் ஷர்மா இணைந்து அதிரடியில் இறங்க, பஞ்சாப் ஸ்கோர் எகிறியது. இவர்களைப் பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்கினர். லிவிங்ஸ்டன் 32 பந்தில் அரை சதம் அடித்தார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் லிவிங்ஸ்டன் ஹாட்ரிக் சிக்சர் விளாசி மிரட்டினார்.

பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது. லிவிங்ஸ்டன் 82 ரன் (42 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), ஜிதேஷ் 49 ரன்னுடன் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடியின் அதிரடியால், கடைசி 52 பந்தில் பஞ்சாப் அணிக்கு 119 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மும்பை பந்துவீச்சில் சாவ்லா 2, அர்ஷத் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

The post பஞ்சாப் 214 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Punjab ,Mogali ,Punjab Kings ,Livingston-Jidesh ,IPL League ,Mumbai Indians ,Dinakaran ,
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...