×

ஆருத்ரா, ஐஎப்எஸ் போன்று 20 சதவீதம் வட்டி தருவதாக ஆசை; ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம் இருப்பதாக ₹2 ஆயிரம் கோடி மோசடி

சென்னை: ஆப்பிரிக்காவில் சொந்தமாக தங்கச் சுரங்கம் உள்ளதாகவும், முதலீடு பணத்திற்கு மாதம் 20 சதவீதம் வட்டி தருவதாகவும் ‘பிராவிடன்ஸ் டிரேடிங்’ நிறுவனம் பொதுமக்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விருகம்பாக்கம், வடபழனி பகுதியில் ‘பிராவிடன்ஸ் டிரேடிங்’ என்ற பெயரில் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை சிவ சக்திநடத்தி வருகிறார். இவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கானா நாட்டில் தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக தங்க சுரங்கம் இருப்பதாகவும், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் வட்டி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதோடு இல்லாமல் முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு நிலமாக பத்திரப்பதிவு செய்து, அதற்கும் வட்டி தருவதாகவும் மற்றொரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். மேலும் முதலீட்டாளர்களை நம்ப வைப்பதற்காக சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் கூட்டங்களை நடத்தி லட்சக்கணக்காக முதலீடு செய்த 20 பேரை மாதம் தோறும் துபாய்க்கு இன்ப சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோக்களை முதலீடு செய்த நபர்களிடம் காட்டியுள்ளார். தங்கள் நிறுவனத்திற்கு துபாயில் சொந்தமாக அலுவலகம் இருப்பதாகவும், இதனால் சுற்றுலா செல்லும் போது அந்த அலுவலகத்தையும் காண்பிப்பதாகவும் கூறி புகைப்படங்கள், வீடியோக்களை காண்பித்துள்ளார்.

இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 15 மாவட்டங்களில் தற்காலிக அலுவலகங்கள் அமைத்து டீம் லீடர்கள் என்கிற போர்வையில் அந்தந்த மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களை நம்ப வைத்துள்ளனர். அதன்படி பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். சொன்னபடி முதல் 2 மாதங்கள் 20 சதவீத வட்டி கொடுத்துள்ளனர். அதன் பிறகு முதலீடு செய்த பொதுமக்களுக்கு வட்டி கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் சிவ சக்தியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், வெளிநாடுகளில் இருந்து வர வேண்டிய பணம் வந்த உடன் வட்டி மற்றும் அசல் முழுவதையும் கொடுத்துவிடுவதாக உறுதி அளித்துள்ளார். அதன்பிறகு முதலீடு செய்த பொதுமக்கள் சிவ சக்தியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்த போது, அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீடு செய்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனே அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றிகையிட்டு தங்களது முதலீட்டு பணத்தை பெற்று தர வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர்.

அந்த புகார் மனுவில் ‘பிராவிடன்ஸ் டிரேடிங்’ நடத்தி வந்த சிவ சக்தி என்பவர் கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி ரூ.2 ஆயிரம் கோடி வரை பணம் பெற்று தலைமறைவாகிவிட்டார். எனவே மோசடி செய்த சிவ சக்தியை கைது செய்து அவரிடம் இருந்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதைதொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ‘பிராவிடன்ஸ் டிரேடிங்’ நிறுவனம் மோசடி தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆருத்ரா, ஐஎப்எஸ் போன்று 20 சதவீதம் வட்டி தருவதாக ஆசை; ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம் இருப்பதாக ₹2 ஆயிரம் கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Aruthra ,IFS ,Africa ,Chennai ,Providence Trading ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி