×

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் திடீர் விலகல்; தொண்டர்கள் போராட்டம்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, சரத்பவார் நேற்று அறிவித்தார். ஆனால், அரசியலில் இருந்து விலக போவதில்லை என அறிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் சுயசரிதை நூலின் திருத்தப்பட்ட பதிப்பு வெளியீட்டு விழா, மும்பையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சரத்பவார், கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘எனது அரசியல் பயணம் துவங்கிய 1960 மே 1ம் தேதியில் இருந்து 2023 மே 1ம் தேதி வரை நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறேன். எனவேதான், ஒரு படியாவது பின்வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு, கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். ஆனால், அரசியலில் தொடர்ந்து இருப்பேன். எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது’ என்றார். இதனை ஏற்க அங்கிருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் மறுத்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், ஜிதேந்திர ஆவாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்து, மனம் உடைந்தனர். பவார், தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்திய, தேசியவாத காங்கிரஸ் எம்பி பிரபுல் படேல், ‘‘கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை எடுப்பதற்கு முன்பாக சரத்பவார் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை’’ என்றார்.

சரத்பவார் 1958ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்த இவர், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் ஒன்றிய பாதுகாப்பு துறை மற்றும் வேளாண்துறை அமைச்சராகவும் சரத்பவார் பதவி வகித்துள்ளார். கடந்த 1999ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். தனி கட்சியை தொடங்கினாலும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் தன் பயணத்தை தொடர்ந்தார். மகாராஷ்டிராவில் பாஜ-சிவசேனா கூட்டணியை முறித்து, பாஜ அல்லாத காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா கூட்டணி ஆட்சியை அமைக்க முக்கிய பங்கு வகித்தவர். இதனால் 2019ல் தேசிய அளவில் சரத்பவார் குறித்து பேசப்பட்டது.

இதற்கிடையே சமீபத்தில், சரத்பவாரின் மருமகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 53 சட்டமன்ற உறுப்பினர்களில், 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜவுடன் கூட்டணி வைக்க போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது யூகம் மட்டுமே எனவும், இது உண்மை இல்லை எனவும் சரத்பவார் விளக்கமளித்தார். இந்நிலையில்தான், நேற்று திடீரென கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்துள்ளார். காரணம் இதுதானா?: இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னதாக அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோரை நேரில் அழைத்து அவருடன் 3 மணி நேரத்திற்கு மேலாக சரத்பவார் ஆலோசனை நடத்தியிருந்தார். இதைத் தொடர்ந்தே தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆகவே இரண்டுக்கும் தொடர்பிருக்குமோ என்ற நோக்கத்திலும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேநேரம், மாநில தேர்தலை மனதில் வைத்து இம்முடிவை சரத்பவாரே எடுத்தாரா என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

சரத்பவாரின் இந்த முடிவு அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள நிலையில், முடிவை திரும்ப பெற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க கட்சியின் மூத்த உறுப்பினர்களான சுப்பிரியா சுலே, அஜித் பவார், ஜெயந்த் பாட்டில், அணில் தேஷ்முத் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்படுகிறது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். சரத்பவாரின் இந்த திடீர் அறிவிப்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘சரத்பவார் தனது முடிவை மாற்றி கொண்டு மீண்டும் பொறுப்புக்கு வர வேண்டும்’ என்று வலியுறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சரத்பவார், தனது இல்லத்தில் இருந்து இன்று வெளியேறினார். கார் மூலம் மும்பையில் உள்ள ஒய்.பி. சாவன் மையத்தை சென்றடைந்தார்.

The post தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் திடீர் விலகல்; தொண்டர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Saratbhawar ,Nationalist Congress Party ,Mumbai ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...