×

தமிழ்நாடு அரசு, எச்.சி.எல். அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது..!!

சென்னை: தமிழ்நாடு அரசு, எச்.சி.எல். அறக்கட்டளை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், புதூர், விளாத்திக்குளம் ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டமான எச்.சி.எல்.ஐ செயல்படுத்த தமிழ்நாடு அரசு மற்றும் எச்.சி.எல். அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.

இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான HCLTech-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான HCL அறக்கட்டளை, அதன் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான HCL Samuday-ஐ தமிழ்நாட்டின் 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி. பெ.அமுதா, இ.ஆ.ப., மற்றும் HCL அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் திரு. அலோக் வர்மா ஆகியோர் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலாளர் முனைவர் மு.கருணாகரன், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர்திருமதி. க. முத்து மீனாள், HCL நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. ஷிகர் மல்ஹோத்ரா, HCL அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர். நிதி புந்திர், குழு மேலாளர் திரு. பிரிஜோ தாருக், திரு. எம்.விஸ்வலிங்கம், திரு. வைபவ் சவுகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

HCL Samuday தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும்பங்களுக்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும். HCL Samuday திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 42,000 வீடுகளில் அடிப்படைக் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தேவையான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை கிராம வளர்ச்சித் திட்டங்களாகத் தொகுக்கப்பட்டதின் வாயிலாக, கிராம சமூகங்களின் பங்கேற்பை அதிகரிக்க, தொடக்கத் திட்டங்கள் கண்டறியப்பட்டன.

இன்று வரை தூத்துக்குடி மாவட்டத்தில் HCL Samuday-ன் செயல்பாடுகளில் சில முக்கிய வெற்றிகள்:

* 132 தொடக்கப் பள்ளிகளில் சிறந்த கற்றலுக்காக டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

* டிஜிட்டல் கற்றலுக்காக 20 அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

* 58 கிராம ஊராட்சிகளில் தொற்றாத நோய்களுக்கான மேம்பட்ட பரிசோதனை மற்றும் மேலாண்மை செய்யப்பட்டுள்ளன.

* ஐந்து கிராம அளவிலான தையல் மையங்களில் தையல் இயந்திரங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களில் உள்ள 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

* ஊட்டச்சத்துக் குறைபாடு மேலாண்மைக்கான சோதனை முகாமில் கண்டறியப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள 41 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன.

தற்போது, HCL Samuday உத்தரப்பிரதேசத்தில் உள்ள Hardoi மாவட்டத்தின் பதினொரு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் 524 கிராம ஊராட்சிகளில் 2,136 கிராமங்களில் வசிக்கும் 24 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதில் பெரும்பங்காற்றி வருகிறது. HCL Samuday மிகவும் அத்தியாவசியமான சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்கிட அரசுடன் இணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமுதாய அமைப்புகளுடன் ஆழ்ந்து ஈடுபடுவதன் மூலம் சிறப்பான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. மேலும், வளர்ச்சித் திட்டங்களில் உள்ளூர் சமூகங்களை பொறுப்பேற்க தூண்டுகோலாகவும் அமைந்து வருகிறது.

The post தமிழ்நாடு அரசு, எச்.சி.எல். அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது..!! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu, H.P. RC ,Minister ,Udhayanidi Stalin ,Chennai ,Government of Tamil Nadu ,H.M. RC ,Thuthukudi ,Tamil Nadu ,Government of Tamil Nadu, H. RC ,Udaiyanidhi Stalin ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...