×

கொல்லிமலையில் தொடர்ந்து மழை; ஆகாயகங்கையில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது கொல்லிமலை. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சினி பால்ஸ், அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில், மாசிலா அருவி, நம் அருவி, தாவரவியல் பூங்கா, வாசலூர்பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை காட்சி முனையம் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக போதிய மழை இல்லாத காரணத்தாலும், அதிக வெயில் நிலவியதாலும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவிகளில் குறைந்த அளவிலான தண்ணீர் கொட்டியது. நம் அருவியில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். போதிய மழை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக கொல்லிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழையின் காரணமாக காட்டாறுகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மழை பெய்தால் கொல்லிமலையில் சீதோஷ்ண நிலை மாறி சில்லென்ற குளிர் காற்று வீசும் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

The post கொல்லிமலையில் தொடர்ந்து மழை; ஆகாயகங்கையில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kolimalaya ,Aagayaganga ,Sendamangalam ,Ahaya Ganga ,Kolimalayas ,Dinakaran ,
× RELATED தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல தடை