×

குணசித்திர நடிகராக விளங்கிய மனோபாலாவின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இயக்குநரும், நடிகருமான மனோபாலா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவருமான மனோபாலா (69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் நாளை காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

மனோபாலா மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா, உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post குணசித்திர நடிகராக விளங்கிய மனோபாலாவின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Manopala ,Chief Minister ,MK G.K. ,Stalin ,Chennai ,Mukheri ,G.K. Stalin ,Kunasitra ,B.C. G.K. Stalin ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...