×

லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த ₹10கோடி சொத்துக்கள் பறிமுதல்: கூட்டுறவுத்துறை பெண் பதிவாளர் அதிரடி கைது

திருமலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த கூட்டுறவுத்துறை உதவி பெண் பதிவாளர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கர்னூல் கிருஷ்ணா நகரில் உள்ள கோட்ட கூட்டுறவு அலுவலகத்தில் உதவி பதிவாளராக பணியாற்றி வருபவர் சுஜாதா. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் தேஜேஸ்வரராவ், கிருஷ்ணாரெட்டி, ஸ்ரீநாத்ரெட்டி, கிருஷ்ணய்யா, இம்தியாஸ்பாஷா, வம்சிநாத் உள்ளிட்டோர் நேற்று கர்னூல் ஸ்ரீராம்நகர், நாகுலகட்டாவில் உள்ள சுஜாதாவின் வீடுகள், அவரது உறவினர்கள் வீடு மற்றும் கூட்டுறவு அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக சம்பாதித்து சேர்த்து வைத்த அசையா மற்றும் அசையும் சொத்துகள் அடையாளம் காணப்பட்டது.

ஸ்ரீராம் நகரில் 2 அடுக்குமாடி வீடு, அசோக் நகரில் ஓரடுக்கு மாடி வீடு, கஸ்தூரி நகரில் வீடு, புத்தவார்பேட்டையில் ஓரடுக்கு மாடிவீடு மற்றும் அதன் அருகில் மற்றொரு வணிக காம்ப்ளக்ஸ், கர்னூல் மண்டலம் சுங்கேசுவில் 2.53 ஏக்கர் விவசாய நிலம், கர்னூலைச்சுற்றி 8 வீட்டுமனைகள், வங்கி லாக்கரில் 50 சவரன் நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் டாடா விஸ்டா கார், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டியுடன் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் வீட்டு உபயோக பொருட்கள், ₹8.21 லட்சம் ரொக்கம் மற்றும் சில உறுதிமொழி பாண்டுகள் உட்பட ₹10 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சிவநாராயணசாமி தெரிவித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜாதாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். கைதான சுஜாதாவை கர்னூல் ஏசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கர்னூலை சேர்ந்த சுஜாதா, 1993ம் ஆண்டு டிசம்பர் 9ம்தேதி கூட்டுறவுத்துறையில் இளநிலை ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். 1999ம் ஆண்டு முதுநிலை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று கர்னூல், ஆத்மகுரு பகுதிகளில் பணிபுரிந்தார். 2009ல் உதவி பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். ஆத்மகுருவில் ஆட்சியர் அலுவலகத்தில் டி.சி.ஓவாக பணியாற்றினார். தற்போது 6 ஆண்டுகளாக கர்னூல் கிருஷ்ணா நகரில் உள்ள கோட்ட கூட்டுறவு அலுவலகத்தில் உதவி பதிவாளராக பணியாற்றினார்.

சார்பதிவாளர் வீட்டில் சோதனை
என்டிஆர் மாவட்டம் விஜயவாடாவில் உள்ள படமாடா சார்-பதிவாளர் அஸ்ஸா ராகவராவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்தது. அதன்பேரில் அவருக்கு சொந்தமான வீடுகளில் உறவினர்களுக்கு சொந்தமாக 4 இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் 2வது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது. இவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என ஏசிபி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திராவில் கடந்த நாட்களாக 7 துணை பதிவாளர் அலுவலகம், 2 தாசில்தார் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த ₹10கோடி சொத்துக்கள் பறிமுதல்: கூட்டுறவுத்துறை பெண் பதிவாளர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,AP ,Karnool Krishna ,
× RELATED ஆந்திராவில் 16 மாவட்டங்களில் சுட்டெரித்த 114.4 டிகிரி வெயில்