×

மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ பயண திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக பழனிசெட்டிபட்டியில் தொடக்கம்..!!

தேனி: நாட்டிலேயே முதல்முறையாக மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ பயண திட்டத்தை பழனிசெட்டிபட்டி பேரூராட்சி துவக்கியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில், சுமார் 25,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 2500 பேர் மூத்த குடிமக்கள் ஆவர். இவர்கள் மாதாந்திர மருத்துவ சிகிச்சை, நியாயவிலை கடை மற்றும் அவசர மருத்துவ தேவைக்காக எந்த நேரமும் ஆட்டோவில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை பழனிசெட்டிபட்டி பேரூராட்சி துவக்கியுள்ளது. இதில் 60 வயது கடந்த மூத்த குடிமக்கள் தங்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை காண்பித்து பேரூராட்சியில் தங்களை பதிவு செய்து கொண்டனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடையாள அட்டையுடன் கூடிய கையேடு வழங்கப்பட்டது. அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால், பயனாளர்களின் இருப்பிடத்திற்கே வரும் ஆட்டோ ஓட்டுனர்கள், 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பகுதிக்கு இலவசமாகவே அழைத்து செல்கின்றனர். மேலும் மூத்த குடிமக்களின் வேலை முடியும் வரை காத்திருந்து மீண்டும் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே கொண்டுவந்து விடுவது ஆட்டோ ஓட்டுனர்களின் பொறுப்பாகும். ஆட்டோ சங்கத்தினரிடம் ஒப்புதலோடு செயல்படும் இத்திட்டத்திற்கு பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தனி பிரிவு துவங்கப்பட்டு அதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்டோக்களுக்கு டீசல் கட்டணத்திற்கான நிதி உதவி வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், மூத்த குடிமக்களை இலவசமாக அழைத்து செல்வதற்கு பணவிரயம் ஆனாலும் மகிழ்ச்சி தருவதாக ஓட்டுனர்கள் கூறியுள்ளனர். தள்ளாடும் வயதில் ஆதரவு இல்லாமல் தவிக்கும் மூத்த குடிமக்களுக்கு ஊன்றுகோலாய் செயல்படும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் இந்த திட்டம் மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது.

The post மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ பயண திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக பழனிசெட்டிபட்டியில் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Palanisettipatti ,Honey ,Palanisettipatti Pradesh ,Honey District ,
× RELATED கஞ்சா வழக்கில் கைதான யூடியூபர் சங்கரின் ஜாமீன் மனு வாபஸ்