×

கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்துக்கு அமோக வரவேற்பு: 7 நாட்களில் 50,000 பேர் பயணம்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக துவக்கப்பட்ட கொச்சி வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்து உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளிடமும் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. கேரளாவில் கடலையொட்டி தனி தீவு போல் காட்சியளிக்கும் எழில் நகரமான கொச்சியில் 10 தீவுகளை ஒன்றிணைக்கும் வகையில் வாட்டர் மெட்ரோ படகு சேவையை சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு தீவிலும் மெட்ரோ ரயில் நிலையங்களை போலவே படகுகள் வந்துசெல்ல 38 முனையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக இயக்கப்பட்டு வரும் 8 எலக்ட்ரிக் ஹைப்ரீட் படகுகளில் தலா ஒருவருக்கு 20 முதல் 40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது குறைவான கட்டணம் என்பதால் இந்த படகு சேவை துவங்கிய நாள் முதல் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாகி இருப்பதால் நேரம் நிர்ணயிக்கப்படாமல் 15 முதல் 20 நிமிட இடைவெளியில் படகு சேவை இயக்கப்படுகின்றது. ஒவ்வொரு படகிலும் கிட்டத்தட்ட 100 பேர் பயணித்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள படகுகளில் கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 50,000 பேர் பயணம் செய்துள்ளனர். உள்ளூர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக துவங்கப்பட்ட வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்தில் கோடை விடுமுறை காரணமாக கேரளா வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

மெட்ரோ ரயில்களை போல் கண்ணாடிகளால் மூடப்பட்ட குளிரூட்டப்பட்ட சொகுசு படகுகளில் அமர்ந்தபடி இயற்கையின் அழகை ரசித்து வருகின்றனர். வாட்டர் மெட்ரோ படகு சேவை திட்டம் அடுத்தாண்டு முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் கேரளாவின் திருச்சூர், ஆலப்புழா, கோட்டையம், கோழிக்கோடு உள்ளிட்ட பெரிய நகரங்களை இணைக்கும் விதமாக நீர்வழிப் பாதை போக்குவரத்து துவங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

The post கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்துக்கு அமோக வரவேற்பு: 7 நாட்களில் 50,000 பேர் பயணம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kochi Water Metro ,Kerala ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது