×

வண்டல், சவுடு, களிமண் எடுத்து கொள்ள விவசாயிகள் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வண்டல்மண், சவுடுமண் மற்றும் களிமண் எடுத்துகொள்வதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம். 20 நாட்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று கலக்டர் சாரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சிறுகனிம விதிகள்படி திருவாரூர் மாவட்டத்தில் நீர் நிலைகளில் அமைந்துள்ள மண் வண்டல்மண், சவுடுமண் மற்றும் களிமண் போன்ற கனிமங்களை உண்மையான வேளாண் நோக்கத்திற்காக வெட்டி எடுத்துச் செல்ல கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு விவசாயிகள் விண்ணப்பத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன்படி கட்டணமில்லாமல் பொதுமக்கள் வீட்டுப்பயனுக்காக மற்றும் வேளாண் நோக்கத்திற்காக மனுசெய்வதற்கான நிபந்தனைகளாக விண்ணப்பதார்களின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம் மற்றும் வண்டல்மண் சவுடுமண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கும் ஏரி மற்றும் குளம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள வருவாய்க் கிராமங்களில் அமைந்திருந்த வேண்டும்.

விவசாயப் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் செய்வோர் தங்களுடைய விவசாய நிலங்கள் தொடர்பாக கிராம நிருவாக அலுவலரின் சான்று, சிட்டா மற்றும் அடங்கல் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவசாயப் பயன்பாட்டிற்காக ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 75 கனமீட்டருக்கு மிகாமலும் மற்றும் புன்செய் நிலங்களுக்கு 90 கனமீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். பொதுமக்களின் சொந்தப்பயன்பாட்டிற்கு 30 கனமீட்டருக்கு மிகாமல் சவுடுமண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். மண்பாண்டங்கள் செய்வதற்கான களிமண் எடுக்க விண்ணப்பம் செய்வோருக்கு 60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும.

இதற்கு சம்மந்தப்பட்ட மண்பாண்டத் தொழிலாளர் சங்கம் அல்லது கிராம நிருவாக அலுவலரிக் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விவசாயம் பொதுப்பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்யும் நோக்கத்தில் மண் எடுக்க வழங்கப்படும் அனுமதி 20 நாட்கள் மட்டும் செல்லத்தக்கதாகும். இயந்திரப் பயன்பாட்டுச் செலவு மற்றும் ஏற்றுக்கூலியாக அவர் வண்டல்மண் சவுடுமண் களிமண் எடுக்க கனமீட்டர் ஒன்றுக்கு ரூ.35.20 பொதுப்பணித்துறை ஊரகவளாச்சித்துறையினர் சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் பதவியின் பெயரில் வங்கி கேட்புவரை வோலையாக எடுத்து அளிக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் ஊரகவளர்ச்சித் துறையினரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயனாளிகள் வண்டல்மண் சவுடுமண் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளாகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post வண்டல், சவுடு, களிமண் எடுத்து கொள்ள விவசாயிகள் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...