×

நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவிக்கு திருத்திய மதிப்பெண் சான்று வழங்கல்

நெல்லை,மே 3: நெல்லை ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவிக்கு பிழையுடன் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை திருத்தம் செய்து திருத்திய மதிப்பெண் சான்று வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக நடந்த போராட்டம் நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் திருத்திய சான்றிதழ் வழங்கப்பட்டு முடிவுக்கு வந்தது. பாளை மகாராஜநகர் இந்திரா நகரை சேர்ந்த லிஜின் ராஜா மனைவி ஆரோக்கிய ஜெஸ்லின் பிரபா. பாளையில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கடந்த 2013ம் ஆண்டு பட்டயப்படிப்பு முடித்த இவருக்கு இதற்குரிய மதிப்பெண் சான்று கல்லூரியில் இருந்து வழங்கப்பட்டது.

அதன்பின்னர் மதிப்பெண் சான்றிதழிலில் உள்ள அவரது பெயரில் பிழை உள்ளதை கண்டறிந்தார். பெயரில் உள்ள பிழையை திருத்தம் செய்துதர கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்தார். இதுகுறித்து பல முறை கல்லூரிக்கு சென்று கேட்டும் நிர்வாகம் முறையாக பதிலளிக்காமல் காலம் கடத்தி வந்தது. இந்நிலையில் நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தனது ஆசிரியர் பட்டய சான்றிதழில் பெயரில் உள்ள பிழையை திருத்தி வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, இயக்குநர் அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தினார். விசாரணையில் நெல்லை அரசு தேர்வுகள் இயக்ககம் துணை இயக்குநர், ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் ஆகியோர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி ஆரோக்கிய ஜெஸ்லின் பிரபாவுக்கு ஆசிரியர் பயற்சி பட்டய சான்றிதழில் பெயரில் உள்ள பிழையை திருத்தி அசல் சான்றிதழ்களை நீதிமன்றத்தில் வழங்கினர். இதைதொடர்ந்து நீதிபதி சமீனா பிரபாவுக்கு திருத்தம் செய்த மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி மனுவை முடித்து வைத்தார். இவ்வாறு மனுதாரரின் 10 ஆண்டுகால போராட்டம் நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றத்ததால் முடித்து வைக்கப்பட்டது.

The post நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவிக்கு திருத்திய மதிப்பெண் சான்று வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Permanent People's Court ,Nellai ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...