×

உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா

உளுந்தூர்பேட்டை, மே 3: உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 18 நாள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் மற்றும் தமிழ் கூத்தாண்டவர் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தங்க நகைகளை அணிந்தும், கை நிறைய வளையல்கள் போட்டுக் கொண்டு வந்து கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கோயில் அருகில் சூடம் ஏற்றி விடிய விடிய ஆயிரக்கணக்கான திருநங்கைகள் அரவாணின் பெருமைகளை பாடல்களாக பாடி கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதை பார்ப்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கோயிலுக்கு வந்து திருநங்கைகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

திருநங்கைகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் 4 ஏடிஎஸ்பி, 11 டிஎஸ்பி, 48 இன்ஸ்பெக்டர்கள், 127 சப்இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது மட்டுமின்றி கோயிலை சுற்றி 140 கண்காணிப்பு கேமராக்களும், 20க்கும் மேற்பட்ட டிரோன் கேமராக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் கூதாண்டவர் கோயிலில் சாமி கும்பிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் வசதிக்காக தற்காலிக கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலை ஓர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து இடையூறின்றி கடைகள் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர். வருகின்ற ஆண்டுகளில் கூடுதல் வசதிகள் பக்தர்களுக்கு ஏற்படுத்தி தரப்படும் என்றும், அடுத்த ஆண்டு தேரோட்டத்தின்போது உள்ளூர் விடுமுறை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Koowagam Koothandavar Temple Painting Festival ,Ulundurpet ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல்...