×

கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் குவிந்தனர் புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா

 

திருப்பூர், மே 3: திருப்பூர் குமார்நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அருட்சாதனங்கள் வழங்கும் விழா, தொழிலாளர் தினவிழா மற்றும் தேர்த்திருவிழா என முப்பெரும் விழா கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலி நடைபெற்று வந்தது. முப்பெரும் விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக கடந்த 29-ம் தேதி ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு, புதுநன்மை, உறுதிப்பூசுதல், அருட்சாதனம் வழங்கி பிராத்தனை ஏறெடுத்தார்.

30ம் தேதி 2-வது நாள் நிகழ்ச்சியாக தொழிலாளர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை பேராசிரியர் கிறிஸ்டோபர் கலந்து கொண்டு பேசினார். 3-வது நாள் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியுமான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. விழாவுக்கு ஆலய பங்குத்தந்தை பிலிப் தலைமை வகித்தார். இதில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மறைவட்ட முதன்மை குரு ஸ்டீபன் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு, சிறப்பு தேவசெய்தி வழங்கி பிரார்த்தனை ஏறெடுத்தார். இதை தொடர்ந்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் தேராக அன்பியங்கள் சார்பில் மிக்கேல் அதிதூதர் தேரும், 2-வது தேராக பக்த சபையினர் சார்பில் வேளாங்கண்ணி மாதா தேரும், 3-வது தேராக பங்கு குழுக்கள் மற்றும் பங்கு மக்கள் சார்பில் புனித சூசையப்பர் தேரும் இழுக்கப்பட்டது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட 3 தேர்களும் அங்கேரிபாளையம் ரோடு, டீச்சர்ஸ் காலனி, மருதாசலபுரம், 60 அடி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

பேண்டு, வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆலய மக்கள் கலந்து கொண்டனர். மேலும் தேரோட்டத்தின்போது பொதுமக்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றி வேண்டுதல் செய்தனர். தொடர் மழை காரணமாக தேரோட்ட நிகழ்ச்சி தாமதமாக நடைபெற்றது. ஆனாலும் கொட்டும் மழையிலும் ஆலய மக்கள் உற்சாகத்துடனும், பக்தி பரவசத்துடனும் கலந்து கொண்டனர்.

The post கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் குவிந்தனர் புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Tags : St. ,Susaiyappa ,Temple ,Tirupur ,therthiru festival ,St. Susaiyappar temple ,Kumarnagar, Tirupur ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்