×

11ம் வகுப்பில் பல பாடங்களில் தோல்வி ஒருமுறை நடவடிக்கையாக 3 வாரத்தில் துணைத்தேர்வு நடத்த வேண்டும்: கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்துமாறு கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம் 2018ல் அனுமதி வழங்கியுள்ளது. ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.

அந்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதியில்லை என்று விதிகள் உள்ளது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும். இது அவர்களின் எதிர்காலம் என்பதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post 11ம் வகுப்பில் பல பாடங்களில் தோல்வி ஒருமுறை நடவடிக்கையாக 3 வாரத்தில் துணைத்தேர்வு நடத்த வேண்டும்: கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kendriya Vidyalayya ,Chennai ,Tamil Nadu ,Kendriya Vidyalya ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...