×

திருப்போரூர் – திருக்கழுக்குன்றம் இடையே வனத்துறை ஒப்புதலுடன் சாலையை சீரமைக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எம்எல்ஏ நன்றி

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை 22 கி.மீ தூரம் உள்ளது. இந்த சாலையில் சிறுதாவூர், ஆமூர், பொருந்தவாக்கம், மானாம்பதி, அகரம், எச்சூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சாலையினை பயன்படுத்தி பல்வேறு கிராம மக்கள் தங்களின் வேளாண் பொருட்களை திருப்போருர் மற்றும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள சந்தைக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும், கிராமப்புறங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும், சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு வேலைக்கு செல்வோரும், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் பெரும்பாலான இடங்களில் வனப்பகுதி இருப்பதால் சாலையை பராமரிப்பதிலும், அதற்கான அனுமதியை பெறுவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்க முடியாமல் நெடுஞ்சாலைத் துறையினர் அவதிப்பட்டனர். அண்மையில், சிறுதாவூர் ஏரியில் தூர்வார அனுமதி வழங்கப்பட்டபோது, ஏராளமான கனரக வாகனங்கள் இந்த சாலையின் வழியாக பயணித்தன. இதன் காரணமாக சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியது. இதையடுத்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி தனது தொகுதியில் வனத்துறை ஒப்புதலுக்காக 32 சாலைகள் காத்திருப்பதாகவும், இந்த ஒப்புதலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலைகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வனத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், திருப்போரூர் பகுதி சாலைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, கடந்த வாரம் வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, இந்த சாலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறும்போது, முதற்கட்டமாக திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் இடையிலான சாலையை சீரமைக்க வனத்துறை ஒப்புதல் வழங்கி விட்டதாக கூறினார்.

மேலும், மாவட்ட நிர்வாகம் புதிய சாலையை அமைக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், சட்டமன்ற கூட்டம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாதநிலையில் இந்த ஒப்புதலையும், நிதி ஒதுக்கீட்டையும் செய்த தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வனத்துறை அமைச்சருக்கும், சிறு, குறு நிறுவனங்கள் துறை அமைச்சருக்கும் நன்றி. மேலும், இந்த அறிவிப்பின் மூலம் இப்பகுதி மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்றார்.

The post திருப்போரூர் – திருக்கழுக்குன்றம் இடையே வனத்துறை ஒப்புதலுடன் சாலையை சீரமைக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எம்எல்ஏ நன்றி appeared first on Dinakaran.

Tags : Tiruporur - Tirukkalukkunram ,Forest Department ,MLA ,Chief Minister ,M.K.Stalin. ,Tirupporur ,Thirukkalukkunram ,Sirutavur ,Amur ,Khavavakkam ,M.K.Stalin ,
× RELATED திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் யானை...