×

நிறுவன உரிமத்தின் பெயர் மாற்றம் செய்ய ரூ.20,000 லஞ்சம் மருந்து கட்டுப்பாடு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: திருவள்ளூரில் உள்ள 2 மருந்து வினியோக நிறுவனங்களில் பங்குதாரராகவும், உரிமையாளராகவும் சுதர்சன் என்பவர் இருந்துள்ளார். இவர் மரணமடைந்ததை தொடர்ந்து உரிமங்களில் உள்ள சுதர்சனின் பெயருக்கு பதிலாக தங்கள் பெயரை மாற்றி தரக் கோரி மனைவி அனுராதாவும், சகோதரர் சுப்ரமணியமும் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் 2014ம் ஆண்டு விண்ணப்பித்தனர். இதற்கு இருவரிடமும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆயிரம் ரூபாயை மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனராக இருந்த எஸ்.விஜயராகவன் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் அனுராதா அளித்த புகாரின் அடிப்படையில், வேதிப்பொருள் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக விஜயராகவன் பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் விஜயராகவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி விஜயராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயராகவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருவள்ளூரில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனையில் மூக்குக் கண்ணாடி வாங்குவதற்காக கடனாக 20 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், அதற்காக காசோலை மற்றும் கடனுறுதி பத்திரம் ஆகியவற்றை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ்.உதயகுமார் ஆஜராகி, கடன் பெற்றதாக கூறுவதும் அதற்கு காசோலை, பிராமிசரி நோட் ஆகியவற்றை கொடுத்ததாக கூறுவதில் உண்மை இல்லை. தற்போதுவரை அவை விஜயராகவனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்த தொகை தவிர அவரது அறையிலிருந்து மேலும் 18 ஆயிரத்து 70 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, போலி ஆதாரங்களை காட்டியதை கீழமை நீதிமன்றம் சரியாக கண்டறிந்துள்ளதாக தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post நிறுவன உரிமத்தின் பெயர் மாற்றம் செய்ய ரூ.20,000 லஞ்சம் மருந்து கட்டுப்பாடு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sudarsan ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED அதிகம் எல்லாம் அதிகம் (சென்னை-பஞ்சாப் ஆட்டம் வரை)