×

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் திடீர் விலகல்: அரசியலுக்கு முழுக்கு இல்லை என அறிவிப்பு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, சரத்பவார் நேற்று அறிவித்தார். ஆனால், அரசியலில் இருந்து விலகப்போவதில்லை என அறிவித்துள்ளார். கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் சுயசரிதை நூலின் திருத்தப்பட்ட பதிப்பு வெளியீட்டு விழா, மும்பையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சரத்பவார், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: எனது அரசியல் பயணம் துவங்கிய 1960 மே 1ம் தேதியில் இருந்து 2023 மே 1ம் தேதி வரை நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் நான் ஈடுபட்டிருக்கிறேன். எனவேதான், ஒரு படியாவது பின்வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். ஆனால், அரசியலில் தொடர்ந்து இருப்பேன். எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. இவ்வாறு சரத்பவார் கூறினார். இதனை ஏற்க அங்கிருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் மறுத்தனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், ஜிதேந்திர ஆவாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்து, மனம் உடைந்தனர். பவார் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்திய, தேசியவாத காங்கிரஸ் எம்பி பிரபுல் படேல், ‘‘கட்சிப்பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை எடுப்பதற்கு முன்பாக சரத்பவார் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை’’ என்றார். இந்த அறிவிப்பை வெளியிடும்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவாரும் உடனிருந்தார். அவர் கூறுகையில், ‘‘தனது ராஜினாமா குறித்த கட்சிக் குழுவின் முடிவுக்கு சரத் பவார் கட்டுப்படுவார்’’ என்றார். சரத்பவார் 4 முறை மகாராஷ்டிரா முதல்வராக இருந்தவர். ஒன்றிய விவசாய அமைச்சர், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். தேசிய அரசியலில் புதிய கூட்டணிகள் உருவாகவும், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் காரணகர்த்தாவாகத் திகழ்ந்த சரத்பவாரின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The post தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் திடீர் விலகல்: அரசியலுக்கு முழுக்கு இல்லை என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : saratbhawar ,nationalist congress party ,Mumbai ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...