×

மது பாட்டில் வாங்க ரூ.5 தராததால் தகராறு நண்பன் உள்பட 2 பேரை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபர்: புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

சென்னை: மது பாட்டில் வாங்குவதற்கு ரூ.5 தராததால் ஏற்பட்ட தகராறில் நண்பர் உட்பட 2 பேரை குத்திக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கோழி செல்வம் (32). இவரும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (24) என்பவரும் நண்பர்கள். கூலி தொழிலாளிகளான இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் மனோஜ் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் டோல்கேட் எம்.ஜி.ஆர் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் குடிப்பதற்காக இவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அங்கு, அளவுக்கு அதிகமாக மது அருந்திய கோழி செல்வமும், மனோஜும் கையில் கத்தியை வைத்துக்கொண்டு விளையாடியுள்ளனர்.

அப்போது கோழி செல்வம், மேலும் குடிப்பதற்காக மது பாட்டில் வாங்க முடிவு செய்துள்ளார். இதற்கு, ரூ.5 குறைவாக இருந்ததால், மனோஜிடம் ரூ.5 கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரத்தில் கோழி செல்வம், கத்தியால் மனோஜை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் குடல் சரிந்து மனோஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதை பார்த்த புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெருவை சேர்ந்த திருவேங்கடம் (61) என்பவர், கோழி செல்வத்தை தட்டிக் கேட்டுள்ளார். போதையில் இருந்த கோழி செல்வம், திருவேங்கடத்தையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கு மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் திருவேங்கடமும் சரிந்து விழுந்தார்.

இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் விரைந்து வந்த போலீசார், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதற்கிடையே பஸ்சில் ஏறி தப்ப முயன்ற கோழி செல்வத்தை, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், விளையாட்டாக சண்டை போட்டு இருவரையும் கத்தியால் குத்தியதாக கோழி செல்வம் கூறினார். இதில் இறந்த திருவேங்கடம் திருவள்ளூரைச் சேர்ந்தவர். அங்கிருந்து இங்கு வேலைக்கு வந்தபோது, ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இங்கேயே தங்கி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்த கோழி செல்வத்தை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர். மதுபாட்டில் வாங்க ரூ.5 கொடுக்காத தகராறில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மது பாட்டில் வாங்க ரூ.5 தராததால் தகராறு நண்பன் உள்பட 2 பேரை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபர்: புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puduvannarpettai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?