×

உழவனும் உழத்தியுமாக..!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அடியார்தம் அன்பிற்கு இணங்கி சிவபெருமானும் உமையவளும் மண்ணுலகுக்கு ஏகி அருள்பாலித்த நிகழ்வுகள் மிகப் பலவாகும். நாயன்மார் அறுபத்து மூவர்க்கும் பெருமானும் பெருமாட்டியும் இவ்வாறு இறங்கி வந்து அருள்பாலித்த திறத்தைத்தான் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியும் சேக்கிழாரின் பெரியபுராணமும் நமக்கு எடுத்துரைக்கின்றன. மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் வரலாறு பெரியபுராணத்தில் பரக்கப் பேசப்பெறுகின்றது. சேக்கிழார் பெருமான் இவ்வாறு கூறிய வரலாற்று நிகழ்வுகள் தவிர சில தலங் களில் நடந்ததாகக் கூறப்பெறும் அற்புத நிகழ்ச்சிகள் சில ஆங்காங்கு தல புராணங்களில் பேசப் பெறுகின்றன.

சுந்தரர் வரலாற்றோடு இவ்வாறு கூறப்பெறும் ஒரு தலபுராணச் செய்தி திருநாட்டியத்தான் குடி தலபுராணத்தில் இடம்பெற்றுள்ளது. அப்புராண நிகழ்வை அவ்வாலயத்துச் சுவரில் காணப்பெறும் ஓவியக் காட்சிகள் இரண்டு நமக்குக் கண்முன்னே காட்டி நிற்கின்றன. சோழநாட்டில் திருவாரூருக்கு அருகிலுள்ள ஒரு தலமே திருநாட்டியத்தான்குடி.

அறுபத்து மூவரில் ஒருவரான கோட்புலி நாயனார் இவ்வூரினர். வேளாளர் மரபினைச் சார்ந்த இவர், சோழனின் சேனாதிபதியாகவும் விளங்கியவர். இவர் ஒருமுறை ஆரூருக்கு வந்தபோது சுந்தரரைச் சந்தித்து தம்மூருக்கு வந்து சில நாள் தங்கும்படி வேண்டினார். அதன்படி சுந்தரர் ஆரூரிலிருந்து புறப்பட்டு பல பதிகளை வணங்கிய பின்பு திருநாட்டியத்தான்குடி சென்றடைந்தார். சேனாபதியாகிய கோட்புலியார் நம்பியை உபசரித்து தன் மனைக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தார். அப்போது அவர்தம் மகள்களாகிய சிங்கடியார் வனப்பகையார் இருவரையும் நம்பியாரூரரிடம் அடிமைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டினார்.

நம்பியோ அவர்களை என் மகள்கள் எனக்கூறி மகள்களாக ஏற்றுக்கொண்டார். பின்பு நாட்டியத்தான்குடி திருக்கோயில் சென்று வழிபட்டு ‘‘பூண்நாண் ஆவது ஓர் அரவம்’’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியருளினார். அப்பதிகத்தில், மாணிக்கவண்ணா என்றும், நாட்டியத்தான்குடி நம்பீ என்றும் பெருமானைப் போற்றினார். கடைகாப்புப் பாடலில் ‘‘சிங்கடி அப்பன் ஆரூரன்’’ என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு மரபினையும் முதன்முதலாகப் பதிவு செய்தார்.

பின்னர் ஆரூரர் பாடிய பதிகங்களின் கடைப்பாடலில், தான் மகள்களாக ஏற்றுக்கொண்ட கோட்புலியாரின் புதல்விகளின் பெயர்களைக் குறிப்பிட்டே ‘‘சிங்கடி அப்பன்’’ என்றும், ‘‘வனப்பகை அப்பன்’’ என்றும் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் மரபினை மேற்கொண்டார். திருநாட்டியத்தான்குடியில் தங்கியிருந்த சுந்தரர் பின்னர் கோட்புலியாரிடம் விடைபெற்றுத் தன் தலப்பயணத்தை மேற்கொண்டு மீண்டும் ஆரூரை அடைந்தார்.

கோட்புலியாரோ தன் சத்திய வாக்கைக் காப்பாற்றுவதற்காக தவறு செய்த தன் சுற்றத்தார் அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். அப்போது ஈசனார் தேவியுடன் அவர் முன்பு தோன்றி அவர் எக்கோலத்தில் நின்றாரோ அக்கோலத்தோடே தன்னுடன் வரும்படி பணித்ததோடு சுற்றத்தார் அனைவர்க்கும் அருள்பாலித்தார். இவ்வாறு கோட்புலியார் வாளேந்திய கரத்துடனே ஈசனோடு சென்றது குறிப்பிடத்தக்கதாகும். திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையிலிருந்து பிரியும் மாவூர் வடபாதிமங்கலம் சாலையில் உள்ளது திருநாட்டியத்தான்குடி. ஊரின் நடுவண் திருக்கோயில் உள்ளது.

இறைவனின் திருநாமம் மாணிக்கவண்ணர், ரத்னபுரீசர், கரிநாலேஸ்வரர், நாட்டத்தான்குடி நம்பீ என்பவையாகும். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை என்பதாகும். இத்தலத்து மரம் மாவிலங்கையாகும். சோழர் காலத்து இவ்வாலயம், பின்னாளில் செட்டியார்கள் திருப்பணியால் பழைய எச்சங்கள் ஒருசிலவற்றோடு மட்டும் காணப்பெறுகின்றது.

இத்தலத்துத் தலபுராணம் சுந்தரரோடு தொடர்புடைய நிகழ்வு ஒன்றினை எடுத்தியம்புகின்றது. கோட்புலி நாயனார் வீட்டில் சுந்தரர் தங்கி இருந்தபோது வழிபட கோயிலுக்குச் சென்றார். அங்கு இறைவனையும், இறைவியையும் காணவில்லை. அதிசயித்த சுந்தரர் வாசலில் உள்ள விநாயகரைக் கேட்க அவர் வாய்திறந்து பேசாமல் ஈசான்ய திசையை நோக்கிக் கைகாட்டினார். அவ்வழியே சுந்தரர் சென்று அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் உழவன், உழத்தியாக நடவு வேலைகள் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். கண்டதும்,

நட்ட நடாக்குறை நாளை நடலாம்
நாளை நடாக்குறை சேறு தங்கிடவே
நட்டது போதும் கரை ஏறி வாரும்
நாட்டியத்தான் குடி நம்பி
என்று பாடினார்.

அது கேட்டதும் சுவாமியும் அம்பிகையும் அங்கிருந்து மறைந்து கோயிலுக்குச் செல்ல சுந்தரர் பின்தொடர்ந்து கோயிலுக்குள் செல்ல முனைந்தார். அப்போது வாயிலில் இருந்த பாம்பொன்று சுந்தரரைத் தடுத்து நிறுத்தியது. உடன் சுந்தரர்,

பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன்
புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்
பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்
பிறவேன் ஆகிலும் மறவேன்
காணீர் ஆகிலும் காண்பன் என் மனத்தால்
கருதீர் ஆகிலும் கருதி
நானேல் உம் அடிபாடுதல் ஒழியேன்
நாட்டியத்தான்குடி நம்பீ

எனத் தொடங்கி அத்தலத்துப் பதிகத்தைப் பாடியவண்ணம் அங்கே காட்சிதந்த ஈசனையும் இறைவியையும் வணங்கினார் என்கிறது தலபுராணம். இப்புராணக்கதை சேக்கிழாரால் பெரியபுராணத்தில் குறிப்பிடப் பெறவில்லை எனினும், பின்னாளில் இக்கதை மரபு இத்தலத்தோடு ஒன்றித் திகழலாயிற்று. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பெற்ற இரண்டு ஓவியக் காட்சிகள் இவ்வாலயத்துச் சுவரில் காணப்பெறுகின்றன. அவை முழுவதும் இத்தலபுராணத்தை வண்ண ஓவியத்தால் விளக்கி நிற்கின்றன. முதல் காட்சியில் கோபுரம், சுவாமி, அம்பாள் கோயில் மூலட்டானங்கள் உள்ளன.

ஆனால், உள்ளே தெய்வ உருவங்கள் இல்லை. கோபுரத்துக்கு அருகே உள்ள சிறுகோயிலில் கணபதி பெருமான் காணப்பெறுகின்றார். அருகே ‘‘கைகாட்டி புள்ளையார்’’ என எழுதப்பெற்றுள்ளது. கோபுரத்திற்கு எதிரே திருக்குளமும், தல விருட்சமும் உள்ளன. குளத்தில் மீன்கள் காணப்பெறுகின்றன. கோயிலுக்கு முன்பு அந்தணராக சுந்தரரும் அடியார் திருக்கூட்டமும் கைகூப்பி வணங்கி நிற்கின்றனர். அடுத்த காட்சியில் வயல் ஒன்றில் உழவனொருவன் நாற்று பறிக்க, உழுத வயலில் உழத்தி நாற்று நடுகின்றாள்.

அவர்கள் முன்பு சென்று சுந்தரர் கைகூப்பி நின்று பாடுகின்றார். இதனை ஒட்டிய அடுத்த காட்சியில் நாட்டியத்தான்குடி கோயில் கோபுரம், சுவாமி அம்பாள் கோயில்கள் திருமதிலுடன் காணப்பெறுகின்றன. கருவறைகளில் சிவலிங்கமும், அம்பாள் திருவுருவமும் காணப்பெறுகின்றன. சுவாமி சந்நதி முன்பு நின்றவாறு சுந்தரர் கைகூப்பி வணங்கியவாறு பதிகம் பாடுகின்றார். ஓவியங்கள் சற்று சிதைவுற்றுப் பழமையாக இருந்தாலும் முழு தலபுராணக் கதையை விளக்கும் வண்ணம் உள்ளன.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post உழவனும் உழத்தியுமாக..! appeared first on Dinakaran.

Tags : Aki ,Lord ,Nayanmar ,Dinakaran ,
× RELATED இளையராஜா பற்றி குற்றம் சொல்வதா?.. வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை