×

மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம்: மாசி வீதிகளில் நாளை தேரோட்டம்

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை அரசி மங்கல மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், இன்று கோலாகலமாக நடந்தது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி மீனாட்சியம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை தொடர்ந்து கடந்த 30ம் தேதி மதுரையின் ஆட்சிப் பொறுப்பேற்க மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், நேற்று (மே1) மீனாட்சியம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் ‘திக்கு விஜயம்’ நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

திருக்கல்யாணத்திற்காக கோயிலுக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதி சந்திப்பில் ரூ.25 லட்சம் செலவில் சுமார் 4 ஆயிரம் கிலோ எடையுள்ள பல வண்ணப் பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண, தெய்வானையுடன் முருகப்பெருமானும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுப்பதற்காக பவளக்கனிவாய்ப் பெருமாளும் திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று இரவே மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். இன்று அதிகாலை மீனாட்சி அம்மன், மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார். அவர் தங்கக்கவசத்துடன், சிவப்பு கேரா நிறத்தில் சேலை உடுத்தி, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிந்திருந்தார்.

சுந்தரேசப் பெருமாள் வெண்பட்டும், பிரியாவிடை பச்சைப் பட்டும் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரரும் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து சுந்தரேசுவரர் காசி யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு அம்மனும் சுந்தரேசுவரரும் கோயிலுக்குள் வந்து கன்னி ஊஞ்சல் ஆடினர். இதையடுத்து மேலக்கோபுர வாசலில் மாப்பிள்ளை சுந்தரேசப் பெருமானுக்கு பாதபூஜை நடத்தப்பட்டது. அதன்பின் அவர் மணமேடையில் எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் மணக்கோலத்தில் மேடைக்கு வந்தார். மணமகளின் இடதுபக்கம் பவளக்கனிவாய்ப் பெருமாளும், வலதுபுறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் மேடையில் வீற்றிருந்தனர்.
காலை 8.15 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமணச் சடங்குகள் தொடங்கின.

மணமகள் மீனாட்சியாக கார்த்திக் பட்டரும், சுந்தரேசுவரராக பிரபு பட்டரும் வீற்றிருந்தனர். மேடையின் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, முதலில் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுந்தரேசுவரராக பிரபு பட்டரும், மீனாட்சியாக கார்த்திக் பட்டரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பச்சை பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. பவளக்கனிவாய்ப் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

பின்பு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத் தாலியை கார்த்திக், பிரபு பட்டர்கள் இருவரும் மூன்று முறை பக்தர்கள் முன்பு எடுத்துக் காட்டினர். காலை 8.40 மணியளவில் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, தேவர்கள் வாழ்த்த மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சியம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது விண்ணுலகத்தில் இருந்து தேவர்கள் மலர் தூவி வாழ்த்துவதை போன்று வண்ண மலர்கள் சாமிகள் மீது தூவப்பட்டன. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டனர். ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர்.

அதன்பின்பு சுந்தரேசுவரருக்கும், அம்மனுக்கும் தங்கக் கும்பாவில் சந்தனமும், தங்கச் செம்பில் பன்னீரும் கொண்டு வந்து தெளிக்கப்பட்டன. தொடர்ந்து, தங்கத் தட்டில் கற்பூரம் வைத்து, மீனாட்சி யம்மனுக்கும் சுந்தரேசப் பெருமானுக்கும் தீபஆராதனை காண்பிக்கப்பட்டது. மணமக்கள் தங்க அம்மியில் மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடந்தேறியது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சியம்மனும், சுந்தரேசப்பெருமானும் மேடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோயிலுக்குள் இருக்கும் பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுடன் திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானையும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் வந்தனர்.

திருக்கல்யாண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன்-சுந்தரேசுவரர் அருள் பெற்றுச் சென்றனர். மாலையில் மணமகள் கோலத்தில் மீனாட்சியம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வருகின்றனர். திருக்கல்யாணத்தையொட்டி மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் இன்று ஒரு லட்சம் பேருக்கு காலை முதல் தடபுடல் விருந்து அளிக்கப்படுகிறது. சித்திரைத் திருவிழாவில் நாளை (மே-3) தேரோட்டம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப் பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகிறார்கள். காலை 5.45 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்குகிறது. இதனால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

2 ஆயிரம் பேருக்கு அனுமதி
திருக்கல்யாணத்தை காண இலவச பாஸ் வழங்கப்படவில்லை. ஆனால், ரூ.500, ரூ.200 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இதுதவிர, முன்னுரிமை அடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தெற்கு கோபுர வாசல் வழியாக இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.

The post மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம்: மாசி வீதிகளில் நாளை தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai Sitra Festival Meenatsi-Suntareswarar Thirukalyanam Ghulagalam ,Masi ,Madurai ,Sitra festival ,Madurai Razi Mangala Meenatsi-Suntaressuvalar Thirukkalyanam ,Madurai Sitra Festival Meenatsi-Suntareswarar ,Thirukalyanam ,
× RELATED சித்திரை திருவிழாவில் அழகர்...