×

ஆன்லைன் டிரேடிங் நடத்தி ₹100 கோடி சுருட்டிய வாலிபரின் வீடு, அலுவலகத்துக்கு சீல்

சேலம்: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, பெருமாள்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் நாகராஜ் (35). பட்டதாரியான இவருக்கு, சத்யா என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். இவர் தனியார் வங்கியில் பணியாற்றிய போது, சுமார் ₹35 லட்சம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, தனியார் வங்கியில் இருந்து வெளியேறிய அவர், தனது வீட்டிலேயே ஆன்லைன் டிரேடிங் நடத்தி வந்தார். இவர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நபர்களுக்கு, அதிக வட்டி தருவதாக கூறி ₹100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பணம் யாருக்கும் செலுத்தாததால், சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் தொடர்பு கொண்ட போது, நாகராஜின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், நேரடியாக ஓமலூர் அருகே உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர். அங்கு வந்து விசாரித்த போது ஒரு வாரமாக வீடு பூட்டி இருந்தது. இதுகுறித்து சிலர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசிலும் புகாரளித்தனர்.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகராஜை தேடி வந்தனர். ₹100 கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பிய நாகராஜ் குறித்து, எந்த தகவலும் தெரியாததால், நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கஞ்சநாயக்கன்பட்டி விஏஓ விஜயராஜ் முன்னிலையில் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

The post ஆன்லைன் டிரேடிங் நடத்தி ₹100 கோடி சுருட்டிய வாலிபரின் வீடு, அலுவலகத்துக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Kuppusamy ,Nagaraj ,Kanjanayakanpatti Puradhi ,Perumangothottai ,Salem District, Kadaiyambati ,Waliper ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்