×

டிக்கெட் சலுகை நீக்கியதால் முதியவர்கள் மூலம் ரயில்வேக்கு ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய்: ஆர்டிஐயில் அம்பலம்

புதுடெல்லி: முதியவர்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் 2022-23ம் நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ரயில்வேயில் முதியோருக்கான டிக்கெட் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகை இன்னமும் திருப்பித் தரப்படவில்லை.

இந்நிலையில், மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவுக்கு ரயில்வே அளித்துள்ள பதில்: கடந்த 2022 ஏப்ரல் 1 முதல் கடந்த மார்ச் 31 வரை சுமார் 8 கோடி முதியவர்களுக்கு ரயில்வே டிக்கெட்டில் சலுகை வழங்கப்படவில்லை. இதில் 4.6 கோடி பேர் ஆண்கள், 3.3 கோடி பேர் பெண்கள் மற்றும் 18,000 பேர் திருநங்கைகள் ஆவர். இந்த காலகட்டத்தில் முதியோர் பயணிகளின் மொத்த வருவாய் ரூ.5,062 கோடி. சலுகை ரத்து மூலம் மட்டுமே கூடுதலாக ரூ.2,242 கோடி வருவாய் ரயில்வேக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த 2020 மார்ச் 20 முதல் 2022 மார்ச் 31 வரையிலும் 7.31 கோடி முதியவர்களுக்கு ரயிலில் சலுகை வழங்கப்படவில்லை. 2020-22ம் நிதியாண்டில் முதிய பயணிகள் மூலம் ரூ.3,464 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சலுகை ரத்து மூலம் ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post டிக்கெட் சலுகை நீக்கியதால் முதியவர்கள் மூலம் ரயில்வேக்கு ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய்: ஆர்டிஐயில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Railways ,RTI ,Avalam ,
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...