×

ஒன்றிய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் பதிவு செய்யாத பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு தடை கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யாத பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று தடை விதிக்க கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பால் பொருட்கள், மருந்து பொருட்கள் பொதிந்து விற்க பயன்படும் பிளாஸ்டிக்குக்கும் தடை விதித்து 2020ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிளாஸ்டி தடையை எதிர்த்த மறு ஆய்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், 2020ம் ஆண்டு உத்தரவை முழுமையாக அமல்படுத்த இயலாது எனக் கூறி அந்த உத்தரவை மாற்றியமைக்க அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தின் அனுமதி கோரப்பட்டது. இந்த சூழ்நிலையில், பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் பொறுப்பை பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில், அந்த நிறுவனங்கள் ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரிய அங்கீகாரத்தை பெற வேண்டும். அதற்காக ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரிய அங்கீகாரம் பெற இணையதளத்தில் பதிவு செய்வதற்கு, ஆலை இயங்க ஒப்புதல் அளித்த உத்தரவை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆலைகள் இயங்க ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்புதல் கடிதம் இல்லாததால் ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரிய அங்கீகாரம் கோரி பதிவு செய்ய இயலவில்லை. அதனால், ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். பதிவு செய்யாத ஆலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, ஜூன் 8ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

The post ஒன்றிய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் பதிவு செய்யாத பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு தடை கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Pollution Control Board ,Union ,ICourt ,Chennai ,
× RELATED ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி...