×

தேசத் துரோக வழக்கை பதிவு செய்ய வழிவகுக்கும் 124ஏ சட்டப்பிரிவு மறுபரிசீலனை செய்ய முடிவு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: தேசத்துரோக வழக்கை பதிவு செய்ய வழிவகுக்கும் இபிகோ 124ஏ சட்டபிரிவை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ஏயின் படி பிறரை புண்படுத்தினார், பகை உணர்வை தூண்டினார் என்று யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அப்படி அடைத்தும் இருக்கிறார்கள். குறிப்பாக கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய பாராளுமன்றத்தை கழிப்பிடமாகவும், தேசியச் சின்னமான சாரநாத் சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த கார்டூனிஸ்ட் திரிவேதி இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதற்காக மும்பை போலீஸ் அவர் மீது தேச துரோக வழக்கு இ.பி.கோ 124 ஏ , தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவு, 1971ம் ஆண்டு தேசிய சின்ன அவமதிப்பு தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. இதேப்போன்று கடந்த 2012ம் நவம்பரில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது, ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் மும்பையை சேர்ந்த ஷாகின் தாதா மற்றும் ரேணு என்ற இரு இளம் பெண்களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டார் என பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்து குறித்து கருத்து வெளியிட்ட ரவி ஸ்ரீனிவாசன் ஆகியோர் 66ஏ சட்டப்பிரிவின் படி வழக்குப் பதிவு செய்தது உட்பட இந்த பட்டியல் நீள்கிறது.

இந்த நிலையில் மேற்கண்ட சட்டத்திற்கு எதிராக மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,” ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66-ஏ பிரிவின் கீழ் போலீசார் எப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது புரியவில்லை. இந்த விவகாரம் குறித்து ஒன்றிய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட இந்திய தண்டனை சட்டம் 66ஏ ன் கீழ் எந்தவிதமான வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என ஒன்றிய உள்துறை அமைச்சகமும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஒரு தகவலை தெரிவித்தார். அதில்,”தேசத் துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கும் பிரிவு இபிகோ 124ஏ என்ற சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிவித்தார். இதில் தேசத் துரோக வழக்குகளை பதிவு செய்யும் சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆண்டு மே 11ம் தேதி உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

The post தேசத் துரோக வழக்கை பதிவு செய்ய வழிவகுக்கும் 124ஏ சட்டப்பிரிவு மறுபரிசீலனை செய்ய முடிவு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Government of the Union ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து...