×

தங்கச்சிமடம் தேவாலயத்தில் 30 ஆண்டு இறைபணியாற்றிய பிரான்ஸ் பாதிரியாருக்கு சிலை: மத வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்பு

ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் புனித தெரசாள் தேவாலயத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய பிரான்ஸ் நாட்டு பாதிரியாருக்கு மார்பளவு சிலை வைக்கப்பட்டது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் புனித தெரசாள் ஆலயத்தில் 1922 முதல் 1954 வரை பங்கு தந்தையாக பாதிரியார் பொடேல் பணியாற்றினார். இவர், பிரான்ஸ் நாட்டில் 1884 ஜூன் 12ம் தேதியில் பிறந்தார். தனது 25வது வயதில் இறைப்பணி மீது கொண்ட விருப்பத்தால் இயேசு சபையில் சேர்ந்தார். சில ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தில் பணியாற்றினார்.

தொடர்ந்து இறை பணிக்காக இந்தியா வந்தார். வடஇந்திய பகுதியில் குருசியான் குருமடத்தில் குருத்துவம் பயிற்சி பெற்றவர் 1919ல் தூத்துக்குடி அருகே அடைக்கலபுரத்தில் உதவி பங்கு பணியாளராக பணி அமர்த்தப்பட்டார். பின்னர் 1922ல் தங்கச்சிமடம் புனித தெரசாள் ஆலயத்தில் பங்கு தந்தையாக சேர்ந்தார். இப்பகுதியில் பல தேவாலயங்கள், கல்வி நிலையங்கள் உருவாக காரணமாக இருந்தார். 1954 வரை பணியாற்றி 1965ல் உயிர்நீத்தார்.இவரின் இறைச்சேவையை நினைவு கூரும் வகையில் தங்கச்சிமடம் புனித தெரசாள் ஆலயத்தில் இவருக்கு நினைவு மண்டபம் அமைத்து இவரின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் நினைவு மண்டபத்தை இயேசு சபை மதுரை மறை மாநில தலைவர் பாதிரியார் டென்னிஸ் பொன்னையாவும், சிலையை பாதிரியார் ஜூலியஸ் பொடேலும் திறந்து வைத்தனர். இதில் கிறிஸ்துவர்களுடன், இந்து, முஸ்லிம் சமுதாய தலைவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

The post தங்கச்சிமடம் தேவாலயத்தில் 30 ஆண்டு இறைபணியாற்றிய பிரான்ஸ் பாதிரியாருக்கு சிலை: மத வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thangachimadam Church ,Rameswaram ,Thangachimadam St. Teresa's Church ,Rameswaram… ,Thangachimadam ,Church ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...