×

‘தியாகேசா, ஆரூரா’ கோஷம் விண்ணதிர தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

தஞ்சாவூர்:‘தியாகேசா, ஆரூரா’ கோஷம் விண்ணதிர தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு காலை 6 மணியளவில் தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளினர்.

விதவிதமான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 16 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட தேரின் சிம்மாசனத்தில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருள, காலை 6.40 மணியளவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி. ஆஷிஷ் ராவத், மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்டோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘தியாகேசா, ஆரூரா’ என்ற கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். மக்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர் வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக வலம் வந்து மீண்டும் பிற்பகல் 2மணி நிலையை அடைந்தது. வரும் 4ம் தேதி சிவகங்கை குளத்தில் சுவாமிகள் தீர்த்தவாரியுடன் கொடியிறக்கத்துடன் 18 நாள் விழா நிறைவு பெறுகிறது.

மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சிப்பொறுப்பேற்கும் விதமாக நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான ‘திக்கு விஜயம்’ நேற்று நடைபெற்றது. இதையடுத்து, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண, தெய்வானையுடன் முருகப்பெருமானும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்துக்கொடுப்பதற்காக பவளக்கனிவாய்ப் பெருமாளும் திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று இரவே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.

The post ‘தியாகேசா, ஆரூரா’ கோஷம் விண்ணதிர தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Chitrai Chariot ,Thanjavur Big Temple ,Vinnathira ,Thanjavur ,Vinnathira Thanjavur Big Temple Chitra procession ,Chitra ,Chariot Koalagam ,
× RELATED பள்ளிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு...