×

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தேரிழுத்தனர்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோயில், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அழகுற காட்சி அளிக்கிறது. உலக புகழ்பெற்ற இக்கோயிலில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2015ம் ஆண்டு ஏப்.29ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதன்மூலம் சித்திரை திருவிழாவும் புத்துயிர் பெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் சிம்ம வாகனம், மூஞ்சுறு வாகனம், மேஷ வாகனம், வெள்ளி மயில் வாகனம் உள்ளிட்ட பல்ேவறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்றிரவு சந்திரசேகர விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (1ம் தேதி) காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் 6 மணிக்கு கமலாம்பாள் சமேத தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளினர். விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளினர்.

காலை 6.50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 16 அடி உயரம், 18 அடி அகலம் கொண்ட தேரை வடம் பிடித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார். தேரின் முன் விநாயகர், முருகர் சப்பரமும், தேருக்கு பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரம் வந்தது. இதில் திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வடக்கு வீதி, கீழவீதி, தெற்குவீதி, மேல வீதி வழியாக வலம் வந்து பகலில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். மேலும், விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தேரிழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Thanjai ,Chiritri Cheratrayam ,Sitrita festival ,Thanjana ,Thanjana Great Temple ,Chitrira ,Chiritri Churry ,
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...