×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்காததை கண்டித்து பயணிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

 

அண்ணாநகர், மே 1: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததை கண்டித்து, பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிகளில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனுடன் சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் மே தினத்தையொட்டி (திங்கள்கிழமை) இன்று அரசு விடுமுறை. 3 நாள் தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள், நேற்று முன்தினம் முதல் தங்களின் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்கின்றனர். இதற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை முதல், வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்தபடி இருந்தது.

இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர், விருத்தாசலம், நெய்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர், தங்கள் குடும்பத்தினர் மற்றும் உடமைகளுடன் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் வழக்கமான மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இல்லை. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபற்றி பயணிகள், அங்கிருந்த அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் மற்றும் நேர காப்பாளர்களர் ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் சரியான பதில் தரவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை வரை போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், குழந்தைகளுடன் வந்த பலர் அவதிக்குள்ளாகினர். இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள், கோயம்பேடு மார்க்கெட் எதிரே வெளியூர் அரசு பேருந்துகள் வந்து செல்லும் நுழைவாயில் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வெளியூரில் வந்த அரசு பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமலும், பிற அரசு பேருந்துகள் வெளியேற வழியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கோயம்பேடு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று பயணிகள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர், நேற்று காலை 5 மணியளவில் வெளியூர்களுக்கு செல்லும் அரசு சிறப்பு பேருந்துகள் வரிசையாக வந்து, அங்கு இரவு முதல் அதிகாலை வரை காத்திருந்த பயணிகளை ஏற்றி சென்றது. அங்கு போக்குவரத்தை நெரிசலை போலீசார் சீரமைத்தனர்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்காததை கண்டித்து பயணிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tudalur ,Coimbadu bus station ,Annagar ,Udalur ,Dinakaran ,
× RELATED காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய...