×

பட்டிவீரன்பட்டி பகுதியில் மா விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

 

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி, எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை, கோம்பை பகுதிகள், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலையடிவாரம், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், உள்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் மா விவசாயம் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாத கடைசியில் பூப்பூக்கும். ஏப்ரலில் துவங்கி ஆகஸ்ட் வரை மா விளைச்சல் இருக்கும். மே, ஜூன் மாதங்களில் மாம்பழ சீசன் களைகட்டும். இந்த ஆண்டு தற்போது மா சீசன் துவங்கியுள்ளது.

இப்பகுதிகளில் காசா, கல்லாமை, செந்தூரம் காளாபாடி, சப்போட்டா, கிரேப், மல்கோவா, இமாம்பசந்த், செண்டுமல்லி போன்ற மாம்பழ வகைள் அதிகமாக விளைந்துள்ளன. இந்த ஆண்டு மாமரங்களில் பூ பூக்கும் சமயம் சரியான நேரத்தில் மழை பெய்ததாலும், மாமரங்களுக்கு ஏற்ற காலநிலை நிலவியதாலும் 2 ஆண்டுகளுக்கு பின் விளைச்சல் நன்கு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உள்ளுர் விவசாயிகளிடமிருந்து மாங்காய்களை கொள்முதல் செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக அய்யம்பாளையம், சித்தரேவு போன்ற ஊர்களில் குடோன் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து மா விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில் விளைச்சல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மா விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க கொள்முதல் நிலையமும், மாம்பழ கூழ் தாயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post பட்டிவீரன்பட்டி பகுதியில் மா விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,Dindigul district ,M.Vadipatti ,Ayyampalayam ,Marudhanadi dam ,Gombai areas ,Chittarevu ,Devarappanpatti ,Thandikudi ,
× RELATED விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல்...