×

இன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: ரஜினி, கமல் வாக்களித்தனர்

சென்னை: தமிழ் திரையுலகில் 24 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் முக்கிய சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தேனாண்டாள் முரளி ராமசாமி பதவி வகித்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிந்தது. சென்னை அடையாறு தனியார் கல்லூரியில் நடந்த தேர்தலில் தலைவர், 2 துணை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தலைவர் பதவிக்கு தற்போது பதவியிலுள்ள தேனாண்டாள் முரளி ராமசாமி, மற்றொரு அணி சார்பில் மன்னன் போட்டியிட்டனர். துணை தலைவர்கள் பதவிகளுக்கு அர்ச்சனா கல்பாத்தி, கலைப்புலி ஜி.சேகரன், ராஜேஸ்வரி வேந்தன், தமிழ்க்குமரன், விடியல் ராஜூ, செயலாளர்கள் பதவிகளுக்கு பி.எல்.தேனப்பன், கமீலா நாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக 26 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பதவிகளுக்கு நடிகை தேவயானி உள்பட 77 பேர் போட்டியிட்டனர். உயர்நீதி மன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன், பாரதிதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர்.

மொத்தம் 1,406 வாக்குகளில் 1,111 வாக்குகள் பதிவானது. தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி எஸ்.தாணு, கே.பாக்யராஜ், மோகன், ராமராஜன், நாசர், எஸ்.வி.சேகர், ஆர்யா, காந்த், விஷ்ணு விஷால், ராதிகா, சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன், மோகன் நடராஜன், பிரமிட் நடராஜன், சிவசக்தி பாண்டியன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், ஆர்.வி.உதயகுமார், பூர்ணிமா பாக்யராஜ், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், தேவயானி, சுகாசினி, ஆர்.கே.செல்வமணி, ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், சசிகுமார் உள்பட பலர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இன்று காலை 9.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

The post இன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: ரஜினி, கமல் வாக்களித்தனர் appeared first on Dinakaran.

Tags : rajini ,kamal ,Chennai ,Tamil Filmmakers Association ,
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்