×

அதிமுகவுக்கும் பதிலடி கொடுக்க தெரியும் தமிழ்நாடு பாஜ அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

சென்னை: பாஜவினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை. பாஜவினரின் விமர்சனங்களுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது அதிமுகவுக்கு தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெட்ட வெளிச்சமானது. இதனால் அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் தான் பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘‘தமிழகத்தில் மக்களவை தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்’’ என்று மிரட்டும் வகையில் பேசினார்.

அதன் பின்னர் தொடர்ந்து அதிமுக தலைவர்களையும், எடப்பாடி பழனிசாமியையும் அண்ணாமலை விமர்சனம் செய்து வந்தார். இதற்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். ‘சில நாட்களுக்குத்தான் அண்ணாமலை தலைவராக இருப்பார்’ என்றும் அவர்கள் எச்சரித்து வந்தனர். இதன் அடுத்த கட்டமாக அதிமுகவைச் சேர்ந்த 15 தலைவர்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்தார். இதற்கும் அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். இது குறித்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ‘‘கூட்டணியை நிர்ணயம் செய்ய கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் நட்டா ஆகியோர் தான் இதில் முடிவெடுப்பார்கள்.

மேலே பாஸ் இருக்கும் போது கீழே இருப்பவர்கள் குறித்து எதற்குப் பேச்சு. கீழே இருப்பவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள் முன்பு தமிழிசை இருந்தார், அடுத்து எல் முருகன் வந்தார். இப்படி மாறிக் கொண்டே இருப்பார்கள். அது குறித்து எல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களைப் பொறுத்தவரைக் கூட்டணி என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் தான் முடிவு செய்வார்கள். கட்சியில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும். அண்ணாமலை சும்மா பேட்டி கொடுத்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைக்கிறார். தயவு செஞ்சு அவர் குறித்து எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம். அரசியலில் இருப்பவர்களுக்கு அடிப்படை தன்மை தெரிந்திருக்க வேண்டும். அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அவர் இப்படிப் பேசி வருகிறார்’’ என்றும் பதிலடி கொடுத்தார்.

இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அண்ணாமலையும் பங்கேற்றார். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் அண்ணாமலையுடனான எடப்பாடி பழனிசாமியின் மோதலுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்ததாக தகவல் வெளியானது. பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “அண்ணாமலையுடன் தகராறு இல்லை” என எடப்பாடி பழனிசாமி
கூறினார்.

இச்சூழலில், பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது டுவிட்டரில், “பாஜ வாங்கும் இடத்தில் இல்லை. அதிமுகவும் கொடுக்கும் இடத்தில் இல்லை. மத்தியில் ஆளப்போவது மோடி. அதன் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் இருந்தாலே தமிழ்நாட்டுக்கு நல்லது. கூட்டணி என்று ஏற்படுமானால் 25 சீட்டுக்கு குறைவில்லாமல் தந்தாலே இல்லை எனில் தனியாகவே” என்று பதிவிட்டார். பாஜ மாநில பொருளாளர் இந்த கருத்து அதிமுக, பாஜக கட்சி கூட்டணியில் மீண்டும் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜவினரை அண்ணாமலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாடு பாஜவினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை. பாஜவினரின் விமர்சனங்களுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது அதிமுகவினருக்கு தெரியும். வேண்டாம் என்று அடக்கி வைத்துள்ளோம். அண்ணாமலை விளக்கம் தராவிட்டால் அவர் சொல்லித்தான் அதிமுகவினரை பாஜவினர் விமர்சிப்பதாக நினைக்க வேண்டி வரும். அதிமுகவை பாஜ பொருளாளர் விமர்சித்தது அண்ணாமலைக்கு தெரிந்து நடந்ததா? இல்லையா? ஊடகங்கள் முன்னிலையில் அண்ணாமலை விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். பாஜ பொருளாளரை கண்டிப்பதாக அண்ணாமலை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து அதிமுக, பாஜவில் உள்ள தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேச தொடங்கியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அதிமுகவுக்கும் பதிலடி கொடுக்க தெரியும் தமிழ்நாடு பாஜ அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Baja ,former minister ,Jayakumar Vijayakumar Mukupam ,Chennai ,Bajaviner ,Anamalai ,Kumar ,Baja Annamalai ,Jayakumar Sagittal ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...