×

சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கண்ணகி கோயில் செல்ல பளியன்குடி வனப்பகுதி ‘ரூட் கிளியர்: தமிழக வனத்துறையினர் சீரமைப்பு

கூடலூர்: சித்திரை முழு நிலவு விழாவுக்கு தமிழக வனப்பகுதியான பளியன்குடியில் இருந்து கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதையை கூடலூர் வனத்துறையினர் சீரமைத்தனர்.தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கே, பெரியாறு புலிகள் சரணாலய தமிழக எல்லைப்பகுதியில் 4,830 அடி உயரத்தில் கண்ணகி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல கேரள எல்லை குமுளியில் இருந்து, கேரளஅரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப்பாதையும், கூடலூர் அருகே பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கிமீ நடைபாதையும் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கோயில் இருப்பதால், இந்தப்பாதைகள் வழியாக ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.இந்தாண்டு கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. அன்று விழா நடத்துவது மற்றும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் தொடர்பாக தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் இரு மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் கடந்த ஏப்.17ம் தேதி தேக்கடியில் நடைபெற்றது.

இதில், தமிழக, கேரள வனப்பகுதி வழியாக நடைபயணமாக கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக பாதையை சீரமைப்பது, குடிநீர், கழிப்பிட வசதி செய்து தருவது குறித்தும் பேசப்பட்டது.நேற்று முன்தினம் முதல் கூடலூர் ரேஞ்சர் முரளீதரன் தலைமையில் வனப்பணியாளர்கள் பளியன்குடி வழியாக கண்ணகி கோயிலுக்குச் செல்லும் வனப்பாதையை சீரமைக்கும் பணிகளை துவக்கினர். பளியன்குடியிலிருந்து அத்தியூத்து வரை நடைபாதையில் உள்ள செடி,கொடிகளை வெட்டி அகற்றி, பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக பாதையை சரி செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘பளியன்குடியிலிருந்து அத்தியூத்து வரை 3 கிமீ வனப்பகுதியில் பக்தர்கள் நடந்து செல்ல பாதை சீரமைக்கப்பட்டது.தற்போது மழை பெய்து வருவதால் 2 நாட்களுக்குப் பின் இப்பாதையில் சுண்ணாம்பு போடப்படும். அதுபோல் கோயில் தோரணவாயில் பகுதியில் உள்ள சுனை (கிணறு) சுத்தப்படுத்தப்பட்டது’’ என்றார்.

The post சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கண்ணகி கோயில் செல்ல பளியன்குடி வனப்பகுதி ‘ரூட் கிளியர்: தமிழக வனத்துறையினர் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chitra Pournami festival ,Kannagi temple ,Palyankudi forest ,Tamil Nadu Forest Department ,Kudalur ,Palyankudi, Tamil Nadu forest ,Chitra full moon ,
× RELATED பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி...