×

களை கட்டிய கோடை சீசன் ஊட்டியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், அதற்கேற்ப கோடை விழா தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 6, 7ல் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, 12,13,14 ஆகிய தேதிகளில் கூடலூரில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 125வது மலர் கண்காட்சி மே 19 துவங்கி 23 வரை நடைபெற உள்ளது. நிறைவு நிகழ்ச்சியாக 27, 28ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடக்கிறது.

இதனிடையே பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஊட்டியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளு குளு சீசன் நிலவுவதால் அதனை அனுபவிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முதல் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மட்டுமின்றி நகுக்கு வெளியில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம், குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் காணப்படுகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் வந்து சென்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் பெருமளவில் கூட்டம் கூடியதால் நகரின் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சர்க்கியுட் பஸ்கள் இயக்கப்பட்டன. இம்மாதம் கோடை விழாக்கள் நடைபெற உள்ளதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post களை கட்டிய கோடை சீசன் ஊட்டியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்