×

தமிழ் மீது பற்று இல்லை இந்தியை திணிப்பதே பாஜவின் இலக்கு: திருமாவளவன் குற்றச்சாட்டு

அவனியாபுரம்: இந்தியை திணிப்பதே பாஜவின் இலக்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி மதுரை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தொழிலாளர் நலன்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தொழிற்சங்க தலைவர்களின் உணர்வுகளை மதித்து, அரசியல் கட்சி தலைவர்களின் உணர்வுகளை மதித்து முதல்வர் நிறுத்தி வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒன்றிய அரசு தொழிலாளர் நலன் குறித்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக தொகுத்துள்ளது. இதில் தொழிலாளர் நலன்களுக்கு எதிராக உள்ள பகுதிகளை நீக்க வேண்டுமென்று முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்காக அங்குள்ள தமிழர்களிடையே 10 தொகுதிகளில் 2 நாள் வாக்கு சேகரிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியை ஒட்டி கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒளிபரப்பப்பட்டது குறித்த கேள்விக்கு, ‘‘இது அவர்களின் தேர்தல் யுக்திகளில் ஒன்று. உண்மையான தமிழ்மொழி மீதான பற்று என்று சொல்ல முடியாது. திருக்குறளை பேசுவது, பாரதியார் பாடலை பேசுவது, அவ்வப்போது தமிழை இடையே எழுதிவைத்து இந்தியில் படிப்பது, இவையெல்லாம் அவர்கள் கையாளக்கூடிய தேர்தல் தந்திரங்களில் ஒன்று. அவர்களின் ஒரே இலக்கு இந்தியை திணிக்க வேண்டுமென்பதும், சமஸ்கிருதத்தை மேம்படுத்த வேண்டுமென்பதும் தான்’’ என்றார்.

The post தமிழ் மீது பற்று இல்லை இந்தியை திணிப்பதே பாஜவின் இலக்கு: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : baja ,thirumavalavan ,Avaniyapuram ,Liberation Leopards Party ,Thirumavavan ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...