×

டெவன் கான்வே அதிரடி வீண் கடைசி பந்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி: சிஎஸ்கே ஏமாற்றம்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சிஎஸ்கே தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், டெவன் கான்வே களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு9.4 ஓவரில் 86 ரன் சேர்த்தது.

ருதுராஜ் 37 ரன் எடுத்து சிக்கந்தர் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து கான்வேயுடன் ஷிவம் துபே இணைந்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தது. துபே 28 ரன் (17 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஷாருக் கான் வசம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய கான்வே 30 பந்தில் அரை சதம் அடித்தார்.மொயீன் அலி 10 ரன், ரவீந்திர ஜடேஜா 12 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி சாம் கரன் வீசிய அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் சிக்சராகத் தூக்கி அமர்க்களப்படுத்த, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்தது. கான்வே 92 ரன் (52 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்), தோனி 13 ரன்னுடன் (4 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப், சாம் கரன், ராகுல் சஹார், சிக்கந்தர் ராஸா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 4.2 ஓவரில் 50 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. தவான் 28 ரன் எடுத்து தேஷ்பாண்டே பந்துவீச்சில் பதிரணாவிடம் பிடிபட்டார்.அடுத்து பிரப்சிம்ரனுடன் அதர்வா இணைந்தார்.பிரப்சிம்ரன் 42 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), அதர்வா 13 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பஞ்சாப் கிங்ஸ் 10.2 ஓவரில் 94 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், லிவிங்ஸ்டன் – சாம் கரன் இணைந்து அதிரடியில் இறங்க பஞ்சாப் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. தேஷ் பாண்டே வீசிய 16வது ஓவரில் 3 சிக்சர் விளாசி லிவிங்ஸ்டன் 40 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அதே ஓவரின் 5வது பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, சிஎஸ்கே வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ஜடேஜா வீசிய 17வது ஓவரில் சாம் கரன் 2 சிக்சர்களைப் பறக்கவிட, ஆட்டம் பஞ்சாப் அணிக்கு சாதகமாகத் திரும்பியது. சாம் கரன் 29 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பதிரணா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஜிதேஷ் ஷர்மா 21 ரன் (10 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்து, தேஷ்பாண்டே வேகத்தில் எல்லைக் கோட்டுக்கு அருகே ரஷீத் பிடித்த அற்புதமான கேட்சால் பெவிலியன் திரும்பினார். சிக்சராக அமைந்திருக்க வேண்டிய அந்த பந்தில் விக்கெட் கிடைக்கவே, சிஎஸ்கே அணிக்கு மீண்டும் வெற்றி நம்பிக்கை துளிர்த்தது.
கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட்ட நிலையில் ஷாருக் – சிக்கந்தர் இணைந்து சவாலை எதிர்கொண்டனர். பதிரணா விசீய அந்த ஓவரின் கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட, சிக்கந்தர் அதை டீப் ஃபைன் லெக் – டீப் மிட்விக்கெட் இடையே விரட்டி 3 ரன்களை ஓடி எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து த்ரில் வெற்றியை பதிவு செய்தது. ஷாருக் 2 ரன், சிக்கந்தர் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் தேஷ்பாண்டே 3, ஜடேஜா 2, பதிரணா 1 விக்கெட் வீழ்த்தினர்.சிஎஸ்கே தோற்றாலும், 52 பந்தில் 92* ரன் விளாசிய டெவன் கான்வே ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் கிங்ஸ் 9 போட்ட்இயில் 5வது வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 5வது இடத்துக்கு முன்னேறியது.

The post டெவன் கான்வே அதிரடி வீண் கடைசி பந்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி: சிஎஸ்கே ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Devon Conway Action ,Punjab Thrill ,CSK ,Chennai ,Punjab Kings ,IPL League ,Chennai Super Kings ,Dinakaran ,
× RELATED பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி