×

கைது செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் போராடும் நிலையில் பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக எம்பியின் அரசியல் பின்னணி என்ன?.. உ.பி-யில் 4 தொகுதி வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்பதால் தயக்கம்

லக்னோ: பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தும் நிலையில், அவர் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், உத்தரபிரதேச மாநில கைசர்கஞ்ச் தொகுதி பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தால், அவர் மீது இரண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டமும் தொடர்கிறது. இதனிடையே, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரிஜ் பூஷண், ‘என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நிரபராதி. போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். குற்றவாளியாக நான் பதவி விலக மாட்டேன்’ என்று கூறினார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் விவகாரத்தில், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் பாஜக தலைமை தொடர்ந்து மவுனம் காத்து வருவதால், இந்த மவுனத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பிரிஜ் பூஷணை பொருத்தமட்டில் கைசர்கஞ்ச் தொகுதி மட்டுமல்ல, அயோத்தி, சரவஸ்தி, பாராபங்கி உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நபராக வலம் வருகிறார்.

அப்பகுதிகளில் அரசியல் ரீதியாக அவர் மிகவும் வலுவாக இருப்பதால், பாஜக தலைமை நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, அவருக்கும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் அவருக்கு சீட் தரவில்லை. 1998ம் ஆண்டு கோண்டா தொகுதியில் சீட் கொடுத்தும் சமாஜ்வாதி கட்சியின் கீர்த்திவர்தன் சிங்கிடம் தோல்வியடைந்தார். இருந்தும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கலுக்கு நெருக்கமானவராக கருதப்படும் இவர், அயோத்தியில் கல்வி பயின்று மாணவ பருவத்திலேயே அரசியல் களத்தில் செயல்பட்டு வந்தார்.

கடந்த 1992ம் ஆண்டில் பாபர் மசூதி விவகாரத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அயோத்தி முதல் சரவஸ்தி வரை சுமார் 100 கி.மீ தொலைவில் சுமார் 50 கல்வி நிறுவனங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். இவரது உறவினர்கள் மேற்கண்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் காலங்களில் கட்சித் தலைமையிடம் எவ்வித எதிர்ப்பார்ப்பும் கேட்காமல், சுயமாக செலவு செய்து தேர்தலை எதிர்கொள்வார். அதனால் கட்சித் தலைமை பிரிஜ் பூஷணின் தேவையை அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடந்த 2008 வரை பாஜக எம்பியாக இருந்த அவர், 2009ம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சிக்கு மாறினார். அப்போது நடந்த தேர்தலில், கைசர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். அதன்பின் மீண்டும் பாஜகவில் சேர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது மல்யுத்த வீராங்கனைகள் விஷயத்தில் பிரிஜ் பூஷண் சிக்கியுள்ளதால், பாஜக மேலிட தலைவர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். மேலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பிரிஜ் பூஷணை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து சர்ச்சைகளால் சூழப்பட்ட போதிலும், தேசிய தலைமையின் முடிவுக்கு மாநில தலைமை விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதே நேரம் பிரிஜ் பூஷணை காப்பாற்றும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டால், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால்தான் 6 முறை எம்பியாக இருந்த பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் பாஜக தலைமை யோசித்து வருகிறது. தடா உள்ளிட்ட பல வழக்குகளில் சிக்கி விடுவிக்கப்பட்ட பிரிஜ் பூஷணுக்கு, மல்யுத்த வீராங்கனைகளின் விவகாரம் பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுபடுவது எளிதல்ல.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானது என்பதால், பிரிஜ் பூஷண் விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்வதை பாஜக தலைமை விடாது என்கின்றனர். அதனால் பிரிஜ் பூஷண் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், கட்சி ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுவிட்டரில் சண்டை
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ெடல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் நேற்று சந்தித்து ஆதரவு அளித்தனர். இந்நிலையில் முன்னாள் மல்யுத்த வீரரும் பாஜக நிர்வாகியுமான பபிதா போகத் வெளியிட்ட பதிவில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகள் அரசியல்வாதிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக போராட்ட களத்தை பயன்படுத்த வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தார்.

இவரது இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனாடே வெளியிட்ட பதிவில், ‘வீதியில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சக சகோதரிகளை ஆதரிக்காத பபிதா போகத், தன்னை ஒரு தலைவராக கனவு காண்கிறார்’ என்று கூறியுள்ளார். மேலும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் சுப்ரியா ஸ்ரீநாடே கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், பாஜக தொண்டர்களால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து அமைச்சர் ஸ்மிருதி இரானி மவுனம் காத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் பபிதா போகத்தின் டுவிட்டுக்கு, போராட்டக் களத்தில் உள்ள வீராங்கனை வினேஷ் போகத் வெளியிட்ட பதிவில், ‘பாதிக்கப்பட்ட வீராங்கனைக்களுக்கு ஆதரவாக நிற்க முடியாவிட்டால், எங்கள் போராட்டத்தை பலவீனப்படுத்த வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

The post கைது செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் போராடும் நிலையில் பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக எம்பியின் அரசியல் பின்னணி என்ன?.. உ.பி-யில் 4 தொகுதி வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்பதால் தயக்கம் appeared first on Dinakaran.

Tags : Bajaka ,U. ,Lucknow ,Rajha ,Brij Bhushan Saran Singh ,Dinakaran ,
× RELATED வாக்களிப்பின் ரகசியமெல்லாம் போயே...