×

போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் மோசடி; போலீஸ் பிடியில் சிக்கிய குற்றவாளி 5வது மாடியில் இருந்து குதித்து பலி: ஏடிஎஸ் சோதனையின் போது திருப்பம்

தானே: போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆபரேட்டர் வழக்கில் தொடர்புடைய கும்பலை பிடிக்க போலீசார் முயன்ற போது, அவர்களில் ஒருவர் 5வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி அடுத்த கவுரி பாதாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், குற்ற வழக்கில் தொடர்புடைய கும்பல் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த அடுக்குமாடி வீட்டுக்குள் ஏடிஎஸ் போலீசார் திடீரென நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த குற்றவாளிகளில் ஒருவன், ஏடிஎஸ் போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக, 5வது மாடியின் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஏடிஎஸ் போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக இடைமறித்து, அதன் இணைப்பை மற்றவர்களுக்கு கொடுத்த கும்பலை சேர்ந்த இருவரை மொரதாபாத் போலீசார் கைது செய்தனர். போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆபரேட்டர் மூலம் இதுபோன்ற சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தனர். சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கான சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பணம் சம்பாதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முகமது கலீம், அவரது சகோதரர் முகமது மெஹ்ராஜ் ஆகியோரிடமிருந்து 550 சிம்கார்டுகள் மற்றும் ₹ 63,000 மீட்கப்பட்டது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் கவுரி பாதா குடியிருப்பில் இருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சோதனையிட்டோம். அப்போது எங்களின் பிடியில் இருந்து தப்பித்த ஒருவர், 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். மேலும் சிலரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

The post போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் மோசடி; போலீஸ் பிடியில் சிக்கிய குற்றவாளி 5வது மாடியில் இருந்து குதித்து பலி: ஏடிஎஸ் சோதனையின் போது திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Thane ,ATS ,Dinakaran ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்