×

கோடை விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலாப்பயணிகளால் குலுங்கியது கொடைக்கானல்

கொடைக்கானல்: பள்ளி கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. பள்ளிகளில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை, மே 1ம் தேதி தொழிலாளர் தினம் என தொடர் விடுமுறையையொட்டி நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் கொடைக்கானலில் குவிய துவங்கி விட்டனர். இதனால் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகி விட்டது.

பிரையண்ட், ரோஜா பூங்காக்களை போல் நேற்று குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள செட்டியார் பூங்காவிலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகம் காணப்பட்டது. இங்கு பூத்து குலுங்கும் சிவப்பு சால்வ்யா மலர்கள், பிளாக்ஸ் போகன் வில்லா மர மலர்கள் மற்றும் மலர்களால் அமைக்கப்பட்ட மயில், செஸ் போர்டு உள்ளிட்டவற்றை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் அதிகளவு வருகையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

கொடைக்கானலில் கோடை சீசன் காலத்தில் வெயில், சாரல் மழை என இதமான சூழல் நிலவும். ஆனால் கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. கொடைக்கானலில் கடந்த 2 நாட்களில் 20 செமீ மழை பதிவானது. இதனால் கொடைக்கானலில் நிலவி வந்த இதமான சூழல் மாறி குளிர் சூழல் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். கோடை மழையால் வெள்ளி, வட்டக்கானல், பாம்பார்புரம், கரடிச்சோலை உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலாப்பயணிகள் ரசித்து செல்கின்றனர். இதேபோல் கொடைக்கானலில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேல்மலை, கீழ்மலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், நூக்கல் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட துவங்கியுள்ளனர்.

The post கோடை விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலாப்பயணிகளால் குலுங்கியது கொடைக்கானல் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dintukal District ,Kodicanal ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...