×

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு ஆழியார் அணை நீர்மட்டம் சரிவு: குடிநீர் தேவைக்கு தேக்கி வைக்க நடவடிக்கை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு, பரம்பிக்குளத்தில் தண்ணீர் திறக்கும் போது காண்டூர் கால்வாய் வழியாகவும். மழை இருக்கும்போது நவமலை, குரங்கு அருவி ஆகிய வழிகளில் இருந்தும் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த அணையில் இருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது விடப்படுகிறது. அதுபோல கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏழேகால் டிஎம்சி தண்ணீர், அவ்வப்போது திறக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோடை காலம் வரும்போது பிஏபி திட்டத்தில் உள்ள சோலையார், திருமூர்த்தி, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைந்து வறட்சியை சந்திக்கும்போது, ஆழியார் அணையில் மட்டும் ஓரளவு தண்ணீர் தேக்கியிருக்கும்.

ஆழியார் அணையில், சுமார் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் பாசனம் மூலம் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தொடரும். இதில், 2022ம் ஆண்டில் ஜூன் முதல் தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், ஆழியார் அணையின் நீர்மட்டம் குறிப்பிட்ட மாதங்களில் முழு அடியான 120 அடியையும் எட்டி தண்ணீர் கடல்போல் காணப்பட்டது.

மேலும், அதே ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையினால், அணையின் நீர்மட்டம் பல மாதங்களாக சுமார் 110அடிக்கு மேல் இருந்துள்ளது. அதன்பின்னர், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மழையில்லாததால், தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து, அணை நீர்மட்டம் சரிய துவங்கியது. இப்படி கடந்த சில மாதமாக போதிய மழையில்லாமல் கோடை வறட்சியால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து, தற்போது நீர்மட்டம் 63 அடியாக சரிந்துள்ளது.

அணை நீர்மட்டம் நாளுக்குநாள் குறைந்து வருவதால் அணையின் பெரும்பாலான பகுதி பாறைகளாகவும், சேறும் சகதியுமாகவும், சம பாதையாகவும் உள்ளது. எப்போதும் தண்ணீர் ததும்பியவாறு இருக்கும் இடத்திலும் தண்ணீர் வற்றி செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல உள்ளது. தற்போது, மழை பொழிவின்றி வறட்சியால் நீர்மட்டம் குறைந்து வரும் ஆழியார் அணையில் இருந்து, இந்தமுறை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, மே மாதத்தில் இருக்குமா என்னும் சந்தேகம் விவசாயிகள் இடையே எழுந்துள்ளது. மேலும், இச்சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால், பருவமழை பெய்வதற்கு முன்பு ஆழியார் அணையில் இருந்து பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அவலம் உண்டாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இருப்பினும், அத்தியாவசிய தேவையான குடிநீருக்காக, ஆழியார் அணையில் தண்ணீர் சேமித்து வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு ஆழியார் அணை நீர்மட்டம் சரிவு: குடிநீர் தேவைக்கு தேக்கி வைக்க நடவடிக்கை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bairiyar Dam ,Pollachi ,Pharbaikulam ,Govai District ,Baheyar Dam ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி அருகே விஏஓ தற்கொலை: 2 பேர் மீது வழக்கு