×

வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் குவிகின்றனர் காரிமங்கலத்தில் ரூ.2.13 கோடியில் நவீனமயமாகும் வாரச்சந்தை

தர்மபுரி: காரிமங்கலத்தில் கூடும் வாரச்சந்தையில் வாரம்தோறும் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடப்பதால், வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இதையடுத்து, இந்த சந்தை ரூ.2.13 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தின் பெரிய சந்தையான காரிமங்கலம் வாரச்சந்தை, 12 ஏக்கரில் அமைந்துள்ளது. கடந்த 63 ஆண்டுகளாக பிரதிவாரம் செவ்வாய்கிழமை தோறும் கூடும் இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் வருகின்றனர்.

இந்த சந்தையில் ஆடு, மாடு, நாட்டுக்கோழிகள் சராசரியாக ரூ.1 கோடிக்கு விற்பனை நடக்கிறது. சந்தையில் 60 கடைகள் போடப்பட்டு, சிறுதானியங்கள், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோக ஆடு, மாடு, கோழி, தேங்காய் வியாபரத்திற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை தோறும், கால்நடைகளை விற்பனை செய்ய விவசாயிகளும், வாங்குவதற்கு வியாபாரிகளும் குவிவார்கள். காரிமங்கலம் பஸ்நிலையத்தை ஒட்டிய பகுதியில், வாரச்சந்தை உள்ளதால், பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்த சந்தையை நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த சந்தை அருகே புதியதாக உழவர் சந்தை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

காரிமங்கலம் பேரூராட்சி சார்பாக வாரச்சந்தைக்கு ரூ.2.13 கோடி மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பாக புதிய உழவர் சந்தைக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.88 கோடி மதிப்பில் பணிகளை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தற்போது சந்தைக்கு கடைகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பிசிஆர் மனோகரன் கூறியதாவது: காரிமங்கலம் வாரச்சந்தையில், பண்டிகை காலங்களில் பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும். பல்வேறு இடங்களிலிருந்து பொதுமக்கள், சிறுவியாபாரிகள் நேரில் வந்து பொருட்கள் வாங்கி செல்வார்கள். ஆடு, மாடுகள், கோழிகளை வாங்க கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிக வியாபாரிகள் வருவார்கள். இதனால் வாரச்சந்தை களை கட்டும். தற்போது, ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் மேலும் 80 கடைகள் அமைத்து, நவீனமயமாக மாற்ற பணிகள் நடக்கிறது. மேலும், கால்நடைகளை தனித்தனியாக விற்பனை செய்யும் இடத்தை மேம்படுத்த, ரூ.2 கோடி கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். வாரச்சந்தை அருகே, புதிய உழவர் சந்தை ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘காரிமங்கலம் பேரூராட்சி சார்பாக வாரச்சந்தைக்கு ரூ.2.13 கோடி மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பாக புதிய உழவர் சந்தைக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில், பேருந்து நிலையம் அருகே பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது,’ என்றனர்.

* தர்மபுரி மாவட்டத்தின் பெரிய சந்தையான காரிமங்கலம் வாரச்சந்தை, 12 ஏக்கரில் அமைந்துள்ளது.

 

The post வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் குவிகின்றனர் காரிமங்கலத்தில் ரூ.2.13 கோடியில் நவீனமயமாகும் வாரச்சந்தை appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Varachanda ,Darmapuri ,
× RELATED கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்