×

மாநகராட்சியில் வருகிற கல்வியாண்டில் இருந்த 102 பள்ளிகளில் 20 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: மேயர் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் வருகிற கல்வியாண்டில் இருந்து 102 பள்ளிகளில் 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி மதுரையில் உள்ள பள்ளிகளில் தொடங்கி வைத்தார். இதில் அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வெண் பொங்கல், ரவா பொங்கல் போன்ற உணவுகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வாரத்தில் 2 நாட்கள் உள்ளூர் சிறு தானியங்களை கொண்டு காலை சிற்றுண்டி தயார் செய்யப்பட்டு வழங்கவும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக குண்டடம் வட்டாரத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 77 மையங்களில் 77 அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான திருப்பூர் மாநகரில் ஏராளமான பனியன் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை திருப்பூர் பகுதிக்கும் கொண்டு வந்தால், பனியன் நிறுவன தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும் பயனடைவார்கள். எனவே மாநகரில் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

அதன்படி திருப்பூர் மாநகராட்சி மேயராக தினேஷ்குமார் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு ரூ.1.10 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் வருகிற கல்வியாண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் ஏராளமான பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான சமையற் கூட கட்டிட பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறியதாவது: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் அனைத்து பணிகளும் அனைத்து தரப்பு மக்களுக்கான வகையில் பாரபட்சமின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் வருகிற கல்வியாண்டில் மாநகராட்சியில் உள்ள 102 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான சமையற்கூடம் கட்ட ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் ஒவ்வொரு பகுதியில் சமையற்கூடம் கட்டப்பட்டு வருகிறது.

15 வேலம்பாளையம் அரசு பள்ளி, கொங்கு மெயின்ரோடு சின்னசாமி அம்மாள் பள்ளி, விஜயாபுரம் மற்றும் முருகம்பாளையம் ஆகிய அரசு பள்ளிகளில் இதற்கான சமையற்கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது. வருகிற மே மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடையும். பள்ளிகள் தொடங்கியதும் இந்த திட்டமும் செயல்பாட்டிற்கு வரும். இந்த திட்டத்தின் மூலம் 19 ஆயிரத்து 824 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள். மேலும், கல்வி இடைநிற்றல் போன்றவையும் குறையும். தேவைப்படுகிற பட்சத்தில் இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* இதில் அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வெண் பொங்கல், ரவா பொங்கல் போன்ற உணவுகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

The post மாநகராட்சியில் வருகிற கல்வியாண்டில் இருந்த 102 பள்ளிகளில் 20 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: மேயர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mayor Info ,Tiruppur ,Tiruppur Municipal ,Mayor ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...