×

திருப்பத்தூர் அருகே பரபரப்பு டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி: நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் எம்எல்ஏ, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் தமிழ்ராஜ்(28). இவர் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தமிழ்ராஜ் கடந்த 25ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது குரும்பகேரி பஞ்சாயத்துக்குட்பட்ட சோமலாபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை பழுது பார்க்க சென்றார். அப்போது மின்சாரம் துண்டித்து விட்டதாக போர்மேன் தெரிவித்த நிலையில், தமிழ்ராஜ் டிரான்ஸ்பார்மர் பழுது நீக்க கம்பத்தின் மீது ஏறி உள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி தமிழ்ராஜ் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தமிழ்ராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதன் காரணமாக தங்கராஜ் உயிரிழப்பிற்கு போர்மேன் தான் காரணம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மாடப்பள்ளி பகுதியில் திருப்பத்தூர்- ஆலங்காயம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்து திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் உதவி செயற்பொறியாளர் அருண்பாண்டியன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ‘இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போர்மேன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தனர். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்து பரபரப்பு ஏற்பட்டது.

The post திருப்பத்தூர் அருகே பரபரப்பு டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி: நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Stir Transformer ,Thirupattur ,Tirupattur ,Road Stir ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...