×

கூடலூர் அரசு நேரடி நெல்முதல் நிலையத்தில் 3 வாரத்தில் 7200 குவிண்டால் நெல் கொள்முதல்: வங்கிக்கணக்கில் உடனே பணம் ‘கிரெடிட்’

* கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ‘குஷி’

கூடலூர்: கூடலூர் அரசு நேரடி நெல்முதல் நிலையத்தில் 3 வாரத்தில் விவசாயிகளிடம் இருந்து 7200 குவிண்டால் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கிலோவுக்கு ரூ.21.60 கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது.விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர், தேனிவட்டத்தில் 2,412 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர் என பதிவுபெற்ற 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. கூடலூர் தாமரைக்குளம், வெட்டுக்காடு, பாரவந்தான், பி.டி.ஆர் வட்டம், ஒழுகுவழி, மரப்பாலம், ஒட்டான்குளம் பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் நடக்கிறது. தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் இரண்டாம் போகம் சாகுபடி செய்யப்பட்ட என்எல்ஆர், கோ 51, கோ 52, ஆகிய ரகங்கள் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. நெல் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கூடலூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூடலூரில் 1வது வார்டு அரசமரம் அருகே வேளாண் மையம் பகுதியில் கடந்த ஏப்.5ல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இங்கு தற்போது இரண்டு இயந்திரங்கள் மூலம் நெல் சுத்தம் செய்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு விவசாயிகளிடமிருந்து கிரேடு ரகம் நெல் குவிண்டால் விலை ரூ.2160க்கும், பொதுரகம் குவிண்டால் ரூ.2115க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனடியாக பணம் செலுத்தப்பட்டும் வருகிறது. கடந்த 3 வாரங்களில், இங்கு விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 7200 குவிண்டால் நெல் பெறப்பட்டுள்ளது. இது 40 கிலோ எடைகொண்ட மூட்டைகளாக பிடிக்கப்பட்டு, இதுவரை 2,700 மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘அறுவடை செய்த நெல்லை நெல்கொள்முதல் நிலையம் கொண்டு வந்ததால் விவசாயிகளுக்கு நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.20.60 மற்றும் ஊக்கத்தொகை 1 ரூபாய் என கிலோவுக்கு ரூ.21.60 வீதம் 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.864 கிடைக்கிறது. இது வியாபாரிகளிடம் விற்பதைவிட விவசாயிகளுக்கு கூடுதலான லாபம் கிடைக்கிறது. நெல் கொள்முதல் நிலையம் வந்ததால், விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல்லை கொடுத்துவிட்டு பணத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அறுவடை சமயத்தில் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தித் தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி’’ என்றனர்.

The post கூடலூர் அரசு நேரடி நெல்முதல் நிலையத்தில் 3 வாரத்தில் 7200 குவிண்டால் நெல் கொள்முதல்: வங்கிக்கணக்கில் உடனே பணம் ‘கிரெடிட்’ appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Government Direct Paddy ,Station ,Pole Valley Farmers' ,Kushi ' ,Kuddalore ,Cuddalore Government Direct Govt ,Cuddalore Government Direct Paddy Station ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்...